திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் ஏற்கனெவே 100க்கும் மேற்பட்ட முறை உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், தற்போது 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணுவுலைகள் இயங்கி வருகின்றன. அதே வளாகத்திற்குள் தற்போது மேலும் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நான்கு அணுவுலைகள் அமைக்கும் பணியை தேசிய அணுமின் சக்திக் கழகம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 3 மற்றும் 4 அணுவுலைகள் செயல்படத் தொடங்கியதும் அவற்றிலிருந்து உண்டாகும் அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே சேமித்து வைப்பதற்கான இடத்தேர்வு அனுமதியை வழங்கியுள்ளது. நிரந்தரமாக கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகள் அனைத்தையும் அதே வளாகத்திற்குள் சேமித்து வைத்து விடுவார்களோ என்கிற நெடுநாள் அச்சத்தை உறுதிபடுத்தும் விதமாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 15 நிபந்தனைகளைக் கூறி உலை செயல்பட அனுமதித்தது. அதில் முக்கியமான நிபந்தனையானது அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான வசதியை 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் மற்றும் நிரந்தரமாக அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான ஆழ் நில கழிவு மையம் உருவாக்க வேண்டும் குறியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.