

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெருஞ்சேரி கிராமத்தில், தாருகாவனத்து சித்தர் பீடத்தில் ஆசியாவிலேயே மிக உயரமான சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 54 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சிவலிங்கத்தின் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக கனடா ரஷ்யா கஜகஸ்தான் உக்கிரேன் உள்ளிட்ட பத்து வெளிநாடுகளைச் சார்ந்த 40 வெளிநாட்டவர்கள் கடந்த ஒரு வார காலமாக மயிலாடுதுறையில் முகாமிட்டுள்ளனர்.

இவர்கள் மயிலாடுதுறையை சுற்றியுள்ள பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற இவர்களுக்கு சித்தர் பீடம் சார்பில் சைவ உணவு விருந்து வழங்கப்பட்டது. இதில் சாதம் சாம்பார் வத்தல் குழம்பு ரசம் மோர் அப்பளம் வடை பாயாசம் ஆகிய தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டது. மேலும் தமிழர்கள் முறைப்படி தரையில் அமர்ந்து உணவு உண்ணும் வகையில் இலையில் உணவு வகைகள் பரிமாறப்பட்டது.
வழக்கமாக சேர்களில் அமர்ந்து டேபிளில் பரிமாறப்படும் உணவு வகைகளை கத்தி முள் கரண்டி உதவியுடன் சாப்பிட்டு பழகிய வெளிநாட்டவர்கள், கீழே அமர்வதற்கு மிகவும் சிரமப்பட்டு அமர்ந்தனர். கைகளால் சாதத்தை பிசைந்து உண்பதற்கு சிரமப்பட்டாலும் அவற்றை ரசித்து ருசித்து உண்டனர். ஒரு சிலர் இலையில் ஸ்பூன் உதவியுடன் உணவை எடுத்து சாப்பிட்ட நிலையில் மற்றும் சிலர் அப்பளத்தை ஸ்பூன் போல் உபயோகம் செய்து சாதத்தை உண்ட காட்சி ரசனை உண்டாக்கியது.
இவ்வாறு பரிமாறப்பட்ட தமிழ் உணவு தங்களுக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், வாசனைப் பொருட்களுடன் இவற்றை உண்டதால் தங்களுக்கு மிகுந்த சக்தி ஏற்பட்டதாகவும், கைகளால் உண்பது தங்களுக்கு பிடித்தமாக உள்ளது என்றும் அவர்கள் அப்போது தெரிவித்தனர்.

