• Fri. Jun 9th, 2023

படித்ததில் பிடித்தது

Byவிஷா

May 15, 2023

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்:

உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?
அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்…
எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது.
கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.

“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது.
ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை.
வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”

“வேறு ஒண்ணா…?
எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.

“உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”

“என்னது பிசினஸ் பார்ட்னரா…?”

ஆமாம்…
எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது.
அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம்.
உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன்.
நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”

“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.

“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…?
உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.

“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”

அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.

“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.

“ஆமாம்ப்பா உனக்கு 90%
எனக்கு ஜஸ்ட் 10% போதும்.
எனக்கு பணம் தேவையில்லை.
அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”

“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.

இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.

ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.

புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான்.
கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.

ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்….

“என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது.
இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.

அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்.

“உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.

அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?

ஒரு செகண்ட் யோசியுங்களேன்….
இது தான் நமது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறது.

இறைவன் தான் பிசினஸ் பார்ட்னர்.
நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).

இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை.
ஒவ்வொரு நொடியை.
நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.

ஐம்புலன்களை நமக்கு கொடுத்து,
அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா?
ஐம்புலன்கள் போதாது என்று
கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான்.
இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்…
அது முடிவே இல்லாமல்தான் போய்கொண்டிருக்கும்.

இவ்வளவு தந்த அவனுக்கு
ஜஸ்ட் ஒரு நாளைக்கு ஒரு10 நிமிடம் நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்.
அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன்.
நமது நன்றியுணர்ச்சிக்காக
அதை எதிர்பார்க்கிறான்.
அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.

நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?

இறைவனை வணங்குவதோ,
வேதங்களை படிப்பதோ,
ஆலயத்துக்கு செல்வதோ,
தொண்டு முதலானவற்றில்
நம்மை ஈடுபடுத்திக்கொள்வதோ ,
அல்லது
சக மனிதர்களுக்கு உதவுவதோ
இவை யாவும் செய்வது நமக்காகத்தான், நம்முடைய நன்மைக்காகத்தான் என்றாலும்,

இறைவன் நமக்கு அளித்த
உயிரையும், உடலையும்,
உறுப்புகளையும்
அவன் கூறிய வழியில்,
அவன் விரும்பிய வழியில்
நடத்திக் கொண்டு இருக்கிறோம்,
என்ற திருப்தியோடு,

இவ்வளவையும் கொடுத்த நம்
இறைவனுக்கு நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான் இந்த வழிபாடு எல்லாம்.

மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல.

நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்;
நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *