சிந்தனைத்துளிகள்
இரு நண்பர்கள் பாலைவனத்தில் பயணம் செய்தனர். வெயிலும் பாலைவன சுடுமணலும் அவர்களின் பயணத்தைக் கடுமையாக்கின. கையில் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள். ஒரு கட்டத்தில் இருவரில் பணக்கார நண்பன், தன் உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று எரிச்சல் கொண்டான்.
அதனால் தன் ஏழை நண்பனுக்குப் பகிர்ந்து தராமல் அதிக உணவைத் தானே சாப்பிடத் தொடங்கினான். தண்ணீரையும் அவன் ஒருவனே குடித்து வந்தான். இதைக் கண்ட அந்த ஏழை நண்பன் கோபம் கொள்ளவே இல்லை.
பாலைவனத்தில் ஓரிடத்தில் ஈச்சை மரம் இருந்தது. அம்மரத்திலிருந்து விழுந்த பழங்களை ஏழையானவன் ஓடிப்போய்ப் பொறுக்கினான். உடனே பணக்காரன், அவை யாவும் தனக்கே சொந்தமானவை என்று சொல்லிப் பறித்தான்.
உன்னிடம்தான் தேவையான உணவு இருக்கிறதே. பிறகு ஏன் இதைப் பறிக்கிறாய் என கேட்டான் ஏழை. அப்படியானால் நான் உணவை வைத்துக்கொண்டு உன்னை ஏமாற்றுகிறேன் என்று குற்றம் சொல்கிறாயா? என்று சொல்லி கோபத்தில் ஏழையின் முகத்தில் ஓங்கி அடித்தான் பணக்காரன்.
அந்நேரமே இருவரும் பிரிந்து நடக்கத் தொடங்கினர். வலியும் அவமானமும் கொண்டவனாக பாலைவன மணலில், “இன்று என் நண்பன் என்னை அடித்து விட்டான்” என்று பெரிதாக எழுதி வைத்துவிட்டு நடந்தான் ஏழை. ஓரிரு நாட்கள் இருவரும் தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள். அப்போது ஓரிடத்தில் சிறிதளவு தண்ணீர் இருப்பதைக் கண்டு ஓடிச் சென்று குடிக்க முயன்றான் பணக்காரன்.
திடீரென நண்பனின் நினைவு வந்தது. இவ்வளவு காலம் பழகிய நண்பனை ஒரு கஷ்டம் வந்ததும் ஏமாற்றி விட்டோமே என்று உணர்ந்து நண்பனைச் சத்தமிட்டு அழைத்தான். குரல் கேட்டு ஓடோடி வந்த ஏழை நண்பன் அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தான். இதிலுள்ள தண்ணீரை ஒருவர் மட்டுமே குடிக்க முடியும். நீயே குடித்துக்கொள் என்றான் பணக்காரன்.
உடனே ஏழை தாகம் மிகுதியில் தண்ணீரை முழுவதும் குடித்து விட்டு நண்பனை அணைத்துக்கொண்டு நன்றி தெரிவித்தான். பின்னர் இருவரும் ஒன்றாக நடக்கத் தொடங்கினர். ஏழை நண்பன் அங்கிருந்த ஒரு கல்லில்,
“என் நண்பன் இன்று மறக்க முடியாத ஓர் உதவி செய்தான்” என்று எழுதி வைத்தான்.
உடனே வானத்திலிருந்து ஒரு தேவதூதன் தோன்றி ஏழையிடம், அவன் உன்னை அடித்தபோது அதை மணலில் எழுதி வைத்தாய். உதவி செய்தபோதோ அதைக் கல்லில் எழுதி வைக்கிறாய்.
அது ஏன்? என்று கேட்டான்.
நடந்த தவறுகள் காற்றோடு போக வேண்டியவை. அதனால் அதை மணலில் எழுதினேன். ஆனால் செய்த நன்றியை என்றும் மறக்கக் கூடாது. ஆகவே அதைக் கல்லில் எழுதி வைத்தேன் என்றான் ஏழை.
ஒருவர் நமக்குச் செய்த தீமைகளை மறந்து அவர் செய்த நன்மைகளை நினைவில் வைத்திருந்தால் உறவுகள் மேம்படும். வாழ்வில் தேடித் தேடி நாம் சேகரித்து வைக்க வேண்டியது பணத்தை அல்ல் மனித உறவுகளை…!!