• Thu. Apr 18th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

May 3, 2023

சிந்தனைத்துளிகள்
ஆசிரியர் சிந்தனை கதை

மாணவன் ஒருவன் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே சிகெரெட் பிடிக்க தொடங்கி விட்டான். 10-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் மது அருந்தவும் கற்று கொண்டான். இருப்பினும் தட்டு தடுமாறி பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் போய் சேர்ந்தான்.
சொல்லவா வேண்டும் பள்ளியில் மது அருந்த கற்று கொண்டவன் ஒரு படி மேல் சென்று மற்ற போதை பொருட்கள் அனைத்திற்கும் அடிமையானான். போதா குறைக்கு பெண்கள் சகவாசமும் அதிகமானது.
இப்படியே சென்று கொண்டிருந்ததால் அதிக பணம் தேவைப்பட்டது. அதனால் சக மாணவர்களிடம் கடன் வாங்குவதில் ஆரம்பித்தது இறுதியில் வழிப்பறி, வீதியில் செல்பர்களின் கழுத்தில் இருக்கும் நகைகளை பறிப்பது போன்றவற்றை செய்ய தூண்டியது.
போதை மயக்கத்தில் அவனும் எதற்கும் தயங்காமல் எல்லாவற்றையும் செய்தான். ஒரு கட்டத்தில் கொலை செய்வதற்கும் துணிந்து, அதையும் செய்தான். எல்லாவற்றிக்கும் ஒரு முடிவு வந்தது. போலீஸ் அவனை கைது செய்தது. அவன் செய்த அனைத்து குற்றங்களுக்கும் சேர்த்து நீதிபதி அவனுக்கு மரண தண்டனை வழங்கினார். சிறையில் அடைக்கப்பட்ட அவன், தன் மரண தண்டனை தேதியை எண்ணி எண்ணி நாட்களை கழித்தான். மரணம் ஒருவனுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்துவிடும். அவனுக்கும் புரிய வைத்தது. கடைசியில் மரண தண்டனை நாளும் வந்தது.
அவனிடம் வந்த அதிகாரிகள் உனக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்ற போகிறோம், ஏதாவது கடைசி ஆசை இருக்கிறதா என்று கேட்டனர். அவன் அதற்கு கடைசியாக ஒருமுறை என் அப்பா அம்மாவை பார்த்து பேச வேண்டும் என்றான்.
அதிகாரிகள் அதற்கு ஏற்பாடு செய்தார்கள். நேரில் வந்த அவனது தாய் தந்தை கதறி அழுது, என் மகனை எல்லாரும் சதி செய்து பொய் வழக்கு போட்டு இந்த நிலைமைக்கு ஆக்கிவிட்டார்கள் என்று அழுது புலம்பினார்கள்.
அப்போது பேசத்தொடங்கிய மகன், என்னுடைய இந்த நிலைமைக்கு இவர்கள் யாரும் காரணம் இல்லை. நீங்களும் நம் குடும்பமும் தான் காரணம் என்றான்.
அதிர்ச்சி அடைந்த அந்த தாய் தந்தை, நாங்கள் என்ன செய்தோம், உன்னை ஜாமினில் விடுவிக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தோம். ஆனால் எதுவும் முடியவில்லை என்றார்கள்.
அதற்கு அந்த இளைஞன் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு முறை ஆசிரியர் என்னை அடித்து விட்டார் என்று உங்களிடம் அழுது கொண்டே வந்து சொன்னேன்.
நீங்கள் ஏன் எதற்கு என்று கூட கேட்காமல் நம் உறவினர்கள் அனைவரையும் அழைத்து கொண்டு பள்ளிக்கு சென்று, அந்த ஆசிரியரையும் அவரை காப்பாற்ற வந்த மற்ற ஆசிரியர்களையும் அடித்து நொறுக்கினீர்கள். அதன் பிறகு எந்த ஆசிரியரும் என்னை ஏன் எதற்கு என்று எதையும் என்னிடம் கேட்பதில்லை. அதன் விளைவு இந்த சிறுவதில் நான் சாகப்போகிறேன் என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *