• Tue. Oct 8th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 25, 2023

சிந்தனைத்துளிகள்

ரியல் ஹீரோ:

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது அம்மாவா ? அப்பாவா ?

ஓர் உளவியல் பதிவு..!

உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பா தான் !
உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார்கள் பல அறிஞர்கள் !
தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாதது தான் எல்லாவித பிரச்சினைக்கும் மூல காரணம் !
ஒரு டீன் ஏஜ் மகளுக்கு, அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல ஒரு நண்பன்! பாதுகாவலன்! ஊக்கமூட்டுபவர்! உற்சாகப்படுத்துபவர்! தன்னம்பிக்கை வளர்ப்பவர் !
நம்பிக்கை விதைப்பவர்! பண்புகளை சொல்லித் தருபவர்! வழிகாட்டி என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும்.
ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே ?
அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள்.
ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள்.
ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள்.
எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டியது அப்பாவின் கடமையாகிறது.

சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில், அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி, பென்சில், இரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவது என எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள்.
மகளும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள்.
திடீரென ஒரு நாள் பார்த்தால், சட்டென்று வளர்ந்து நிற்பாள். “என் டாடி சூப்பர் ” என்று சொல்லிக் கொண்டிருந்தவள், டாடிக்கு ஒண்ணும் தெரியாது “என்று பல்டி அடிப்பாள்.
எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல், மன மாற்றங்கள் தான்.
என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல.
அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் புலம்பாதீர்கள்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் உங்கள் மகள் எப்போதுமே உங்கள் மகள்தான்
உங்கள் மீதான பாசமும், அன்பும், கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும்.
ஆனால் அவளுடைய அன்பை உங்களிடம் வெளிப்படுத்தும் வித்த்தில் தான் மாற்றங்கள்.
டாடி பிளீஸ்….டாடி… வாங்கிக் கொடுங்க டாடி என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் “டாட்…. எனக்கு இது வேணும் முடியுமா? முடியாதா?” என பிடிவாதம்பிடிப்பாள்.
உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள்.
ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள்.
அப்பாவின் அனுமதி இருந்தால்தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி.
நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள்.
“நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார் என்னும் நிலமைதான் இருக்க வேண்டுமே தவிர அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்கு ஆவாது என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.
பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்க வேண்டும். அது தான் முக்கியம்.ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.

என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்..”என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது.நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்.இன்னொரு விஷயம், உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள்.அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள்.
உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ, தலையைக் கோதிப் பாராட்டுவதோ, செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.
அடிக்கடி வெளியே அழைத்துச் செல்லுங்கள். ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள்.மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது.நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள்.
அவள் பள்ளியிலோ, கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது, அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள்.வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்.நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள்.
சரி ! மதிக்கிறீர்கள்.சரி ! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறீர்களா ?
இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில்.
டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது.
சுற்றி வளைத்து எதையும் பேசாமல், உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும்.ஆனந்தம், கவலை, எரிச்சல், சோகம் என எக்கச்சக்க உணர்வுகள் நிரம்பி வழியும்.

சக தோழிகளின் கிண்டல், படிப்பு, அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது.
அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
எதுவானாலும் கவலையில்லை …. அப்பா இருக்கிறார் என்னும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் தர முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை.
எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள். அவள் என்ன தான் மிகப் பெரிய தவறு செய்திருந்தாலும் சரி, உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் –விளைவுகள், தீர்வுகள் என சிந்தியுங்கள்.
நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும், ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு. அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம்.உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள்.அடிக்கடி உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.
அப்பா எப்போ அமைதியா இருப்பாரு, எப்போ எரிஞ்சு விழுவாருன்னு தெரியாது, என்னும் நிலமை வந்தால் சிக்கல் தான்.அவளுடைய படிப்பு, நட்பு, எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும்.
அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை” என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள்.குறிப்பாக ஆண்களைப் பற்றியும், ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம்.
வெளுத்ததெல்லாம் பாலல்ல என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும்.
சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் அப்பாதான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும்.
ஒரு ஆச்சரியமான உண்மைஎன்னவென்றால், பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும்.

பெண்ணின் திருமண வயது வரும்போது ” அப்பா தான் உலகம் எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும் பொறுமையான அணுகுமுறையும், நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்.
~சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர். ஸ்ட்ராங்ஃபாதர்ஸ், ஸ்ட்ராங் டாட்டர்ஸ்” என்னும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார்.
“என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான் என்னும் எண்ணம் அப்பாக்களுக்கு வர வேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்.
~”என் அப்பாவைப் போல நல்ல ஓர் ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்” என உங்கள் மகள் நினைக்க வேண்டும்.
அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்
இது மகளைப் பெற்ற அனைத்து அப்பாக்களுக்கும் எனது சமர்ப்பணம்,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *