மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்காதால் அறுவடை செய்த 250 ஏக்கர் நெல் குவியல்கள் நேற்று பெய்த கோடை மழையால் மூழ்கியது.
இந்தப் பகுதிகளில் தென்கரை கண்மாய் பாசனம் மூலமும், வைகை பாசனம் மூலமும், முள்ளிப்பள்ளம், தென்கரை, காடுப்பட்டி, மன்னாடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்த நெல் காடுபட்டி ரோட்டில் வைக்கப்பட்டுள்ளது. அரசின் நெல் கொள்முதல் நிலையம் வரும் என்று விவசாயிகள் சுமார் 20 நாட்களாக காத்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையில் இந்த நெல் குவியல்கள் மூழ்கி விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் வயல்வெளியில் சுமார் 500 ஏக்கர் அறுவடை செய்யாமலும் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க ஆவணம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். வயல்வெளியில் உள்ள நெல்கள் நீரில் மூழ்கும் அபாய நிலையில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு உடனடியாக கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கின்றனர்.