• Thu. Apr 18th, 2024

பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் – வெளிநாட்டிலும் பொங்கிய பொங்கல்

தை பொங்கல் பண்டிகை உலகமெங்கும் வாழும் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் அச்சம் இருந்தாலும் தமிழகத்தில் மக்கள் வீடுகளில் பொங்கல் வைத்து சூரிய கடவுளுக்கு படையலிட்டு வழிபட்டனர். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


தமிழக மக்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை போகி தொடங்கி காணும் பொங்கல் வரை நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படும். நேற்று போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. வீடுகளில் காப்பு கட்டி விளக்கேற்றி மக்கள் வழிபட்டனர்.
சூரியன் மகரம் ராசியில் பயணிக்கும் நாள் தை திருநாளாக கொண்டாடப்படுகிறது. சூரியனின் வடதிசை பயணம் உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்கத்தினை பொங்கல் பண்டிகையாக உற்சாகமாக கொண்டாடி வருகிறோம். பொங்கல் என்பது பொங்கு என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். அறுவடை முடிந்து புது நெல் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது விவசாய பெருமக்களின் நம்பிக்கை.
நம் வாழ்க்கையில் வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது.


இயற்கைக்கும் சூரியனுக்கும் நன்றி சொல்லும் வகையில் தை முதல்நாளான இன்றைய தினம் காலையிலேயே வீட்டு வாசலில் அழகாய் கோலமிட்டு அலங்கரித்து இறைவனை வரவேற்றனர். புத்தாடை அணிந்து வீட்டு வாசலில் புதுப்பானையில் மஞ்சள், இஞ்சி கொத்து கட்டி அலங்கரித்து பொங்கல் வைத்து சூரியக்கடவுளுக்குப் படையலிட்டு நன்றி கூறி வழிபட்டனர். கொரோனா பரவல் காலமாக இருந்தாலும் தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம் மாறாமல், வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் வீடுகளின் முன் அலங்கரித்து பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


அறுவடைத்திருநாள்,தமிழர் திருநாள் என்று கொண்டாடப்படும் இந்த நல்ல நாளில் வீடுகளில் பொங்கல் வைத்து வழிபடுவோம் நம் வீட்டில் மங்கலம் பொங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகளும் இன்று நடைபெறுகின்றன. வாடிவாசல் திறந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை வீரர்கள் அடக்கி பரிசுகளை தட்டிச்செல்வார்கள். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்றைய தினம் ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *