• Sun. Nov 10th, 2024

ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்- ஈரோடு மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12 மற்றும் 19- ஆம் தேதிகளில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த நிலையில் மூன்றாவது கட்டமாக இன்று (26/09/2021) மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி, “கொரோனாவை கட்டுப்படுத்த மூன்றாம் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து, 579 இடங்களில் இந்த முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள், பஞ்சாயத்துச் செயலர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து, ஒவ்வொரு மையத்திலும் தலா 200 பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், டேட்டாவை பதிவு செய்ய கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்துவதோடு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும். இது தவிர, தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் உள்ள இடங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்டு முயற்சியாகச் செயல்பட வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *