• Fri. Mar 29th, 2024

தேசிய கீதத்துக்கும், தேசிய பாடலுக்கும் சம மரியாதை, டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

தேசிய கீதத்துக்கும், தேசிய பாடலுக்கும் சம மரியாதை செலுத்த வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
நமது நாட்டின் தேசிய கீதமான ‘ஜன கண மன’வுக்கும், தேசிய பாடலான வந்தே மாதரத்துக்கும் ஒரே அந்தஸ்து வழங்க வேண்டும், அனைத்து பள்ளி, கல்வி நிறுவனங்களில் வந்தே மாதரம் பாடுவதை கட்டாயம் ஆக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாய் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதி விபின் சங்கி, நீதிபதி சச்சின் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
நாட்டு மக்களின் உணர்வுகள் மற்றும் ஆன்மாக்களில் தேசிய பாடல் ஒரு தனித்துவமான சிறப்பான இடத்தை பெற்றுள்ளது.
தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல் இரண்டுமே அவற்றுக்கே உரித்தான புனிதத்தன்மையை கொண்டுள்ளன. அவை சமமான மரியாதைக்கு தகுதியானவை. எவ்வாறாயினும், தற்போதைய நடவடிக்கைகளின் பொருள், ஏற்கனவே தீர்க்கப்பட்ட நிலைப்பாடு என்பதை கருத்தில் கொண்டு, இது ஒருபோதும் இந்த கோர்ட்டின் தீர்ப்பை கோரும் ஒரு விஷயமாக இருக்க முடியாது.
1971-ம் ஆண்டு, தேசிய கீதம் பாடுவதைத் தடுக்கும் நடவடிக்கை அல்லது அப்படி பாடும் சபைக்கு இடையூறு விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் தேசிய பாடலான ‘வந்தே மாதரம்‘ விஷயத்தில் இதேபோன்ற தண்டனை விதிகள் அரசால் செய்யப்படவில்லை. மேலும், எந்த சூழ்நிலையில் பாடலாம் அல்லது இசைக்கப்படலாம் என்று எந்த அறிவுறுத்தலும் வெளியிடப்படவில்லை. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *