



அதிமுகவை பொருத்தவரை கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. கொள்கை நிரந்தரமானது, ஆனால் கூட்டணி மாறும். அதிமுக ஒருபோதும் தன்மானத்தை இழக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு, “அதிமுகவின் கணக்கை யாரோ போடுகிறார்கள்” என்று குற்றம் சாட்டிப்பேசினார். இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் வினா எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “பட்ஜெட் கணக்கை சரியாக பாருங்கள். எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் எங்கள் மீது அக்கறை காட்ட தேவையில்லை. எங்கள் கணக்கை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். அதிமுகவை பொருத்தவரை கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. கொள்கை நிரந்தரமானது, ஆனால் கூட்டணி மாறும். அதிமுக ஒருபோதும் தன்மானத்தை இழக்காது. தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்ப்பதில் முதன்மையாக இருப்போம். கட்சி ரீதியாக எங்களின் எதிரி திமுக மட்டும்தான்” என்றார்.

