மதுரைக்கு வருகை புரிந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுரை விமான நிலையம் திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது….
இன்று சிவகாசி மற்றும் மதுரையில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையதிற்கு வருகை புரிந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக சார்பாக உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் மெகா வடிவ மாலையை அணிவித்து வரவேற்பு அளித்தனர். விமான நிலையம் முன்பாக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். மேலும் சிவகாசி செல்லும் வழியில் திருமங்கலம், சிவரக்கோட்டை உள்ளிட்ட வழிநெடுகிலும் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளித்தனர்.
இந்த வரவேற்புக்கு பின், எடப்பாடி பழனிசாமி கார் மூலம் சிவகாசி புறப்பட்டு செல்கிறார். அங்கு காலை 10 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து மாலை 4 மணிக்கு மதுரைக்கு புறப்படுகிறார்.
மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்டம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பாக அ.தி.மு.க.தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் எடப்பாடி பழனிசாமி விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.