முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 79,000 மாணவ மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் திரு.வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
தேனி அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் நிர்வாக மேலாண்மை குழுவின் சார்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மேம்பாட்டு பணிகளை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் இன்று ஆய்வு செய்தார்.
தொழில் பயிற்சி நிலையத்தில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் தரப்படும் ஆய்வகங்கள், திறன் பயிற்சி அளிக்கப்படும் பயிற்சி பட்டறைகள், கணினி மூலம் கற்றுத்தரப்படும் பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றில் வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள் குறித்தும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களிடம் கலந்துரையாடினார்.மேலும் குடிநீர், கழிவறை,விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்,பயன்பாட்டில் உள்ள தொழில்நுட்ப சாதனங்கள் ஆகியவை குறித்தும் தொழிற்பயிற்சி நிர்வாகத்திடம் அவர் விரிவாக கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது:
தமிழ்நாட்டில் உள்ள 91 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் ஆண்டுக்கு 24 ஆயிரம் பேர் தொழிற்பயிற்சி பெற்று பயனடைந்து வருகின்றனர் என்றும்,இதில் பொறியியல் மற்றும் பொறியியல் சாராத துறைகளில் 80 க்கும் மேற்பட்ட பாடப் பிரிவுகளின் கீழ் பயிற்சிகள் வழங்கப்படுவதாக கூறினார்.மேலும் வளர்ந்து வரும் தொழிற்சாலைகளுக்கு ஏற்றவாறு தொழில்பயிற்சிகளில் இயந்திரவியல், ரோபோடிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்காக ரூபாய் 2 ஆயிரத்து 777 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.டிஎன்பிஎஸ்சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் பயன்பெறும் வகையிலும் அதற்கான பயிற்சி வகுப்புகளும் தொழில் பயிற்சி நிலையங்கள் மூலம் நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.இந்த ஆய்வின் போது மதுரை மண்டல இணை இயக்குனர் மகேஸ்வரன், நிர்வாக மேலாண்மை குழுவின் தலைவர் அரவிந்த் மற்றும் பயிற்சி நிலையத்தின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.