ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு அவசர சட்டத்தை உருவாக்க சிறப்பு குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு அவசர சட்டத்தை உருவாக்க சிறப்பு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுனர் சங்கரராமன் ஸ்னேஹா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான லட்சுமி விஜயகுமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல தமிழக அரசின் குழுவில் காவல் துறை கூடுதல் இயக்குனர் வினித் தேவ் வான்கடேவும் இடம் பெற்றுள்ளார்.
மேலும் ஆன்லைன் ரம்மிக்கான விளம்பரத்தால் ஏற்படும் தாக்கம், மரணம், பாதிப்பை ஆராய்ந்து அறிக்கை தர வேண்டும். சிறப்பு குழு 2 வாரங்களுக்குள் தனது பரிந்துரையை அளிக்க வேண்டும். இரண்டு வாரத்தில் குழு தரும் அறிக்கை அடிப்படையில் ஆன்லைன் ரம்மிக்கு அவசர சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும், புதிய சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையில் முன்மாதிரியாக அமையும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மியால் பலரும் பணம் இழந்து தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.