

சிறு குறு தொழில் நிறுவனங்களை பாதுகாக்க தமிழக அரசு அறிவித்துள்ள 31 சதவீத மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்லடத்தில் நடந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு!!!
திருப்பூர் மாவட்டம் கோவை மாவட்டங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த ஜவுளி உற்பத்தி தொழிலில் சைசிங்,சுல்ஜர் நூட்பாலைகள்,கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகள், சொந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் என சங்கிலி தொடர்பான பல்வேறு வகைகளில் முதலீட்டாளர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜவுளி உற்பத்தி தொழிலுக்கு 31% மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதனால் யூனிட் ஒன்றுக்கு ரூ.8. 47 சதவீதம் அதிகரிப்பதால் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காளிவேலம்பட்டி பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கருத்து கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் அதன் தலைவர் சந்திர சேகர்,செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகளும் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு குறித்து இக்கூட்டத்தில் விரிவாக கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.
சிறு குறு ஜவுளி உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வகையில் 31% மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் அதனை வலியுறுத்தும் விதமாக வருகிற 19ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்து முறையிட இருப்பதாகவும் இம்மாதம் 20ஆம் தேதி முதல் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கிலித் தொடர்போடு உள்ள சைசிங், சுல்ஜர், கூலிக்கி நெசவு செய்யும் விசைத்தறிகள்,சொந்த ஜவுளி உற்பத்தி விசைத்தறியாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும், உடனடியாக தமிழக முதல்வர் மற்றும் மின்சார துறை அமைச்சர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற உரிய நடவடிக்கை எடுத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜவுளி உற்பத்தி தொழிலை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
