செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூரில் மின் பொருட்கள் பழுது பார்க்கும் கடை உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ள நூதன சிக்கல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே மின் பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வரும் பிரபு என்பவரிடம், சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மிக்ஸி ஒன்றை கொண்டு வந்து விற்றுத் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தாங்கள் மின் பொருட்களை விற்பனை செய்வதில்லை, பழுது பார்க்கும் பணிகளை மட்டுமே செய்து வருவதாக பிரபு தெரிவித்ததாக தெரிகிறது.

இருப்பினும், தன்னிடம் உணவு வாங்குவதற்குக் கூட பணம் இல்லை என அந்தப் பெண் கண்ணீர் மல்க கூறியதால், மனிதாபிமான அடிப்படையில் மிக்ஸியை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு 700 ரூபாய் வழங்கியதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அயன் பாக்ஸ், கைக்கடிகாரம், புதிய மொபைல் போன், கத்தரிக்கோல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும், பின்னர் லேப்டாப் உள்ளிட்ட மேலும் சில பொருட்களையும் அந்தப் பெண் கொண்டு வந்து விற்றுத் தருமாறு தொடர்ந்து வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் பொருட்களின் உரிமை மற்றும் மூலாதாரம் குறித்து சந்தேகம் அடைந்த பிரபு, அவை திருட்டுப் பொருட்களாக இருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், உரிய ஆதாரங்களுடன் பொருட்களை காவல் நிலையத்திற்கு கொண்டு வருமாறு துணை ஆய்வாளர் அருண் தெரிவித்ததாகவும், அதன்படி பொருட்களையும் புகார் மனுவையும் ஒப்படைத்ததாகவும் பிரபு கூறியுள்ளார்.
விசாரணையின்போது அந்தப் பெண் ஆவேசமடைந்து தன்னை தாக்க முயன்றதோடு, காவல்துறையினரிடமும் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், தன்னை இழிவான வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் நடந்த சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் கடைக்கு வந்த அந்தப் பெண், ஒருமையில் பேசி தகராறில் ஈடுபட்டு தாக்க முயன்றதாகவும், அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து உதவி ஆய்வாளர் அருணிடம் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்தபோதும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கடை உரிமையாளர் பிரபு குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அந்தப் பெண் கொண்டு வந்த பொருட்கள் உண்மையில் யாருக்குச் சொந்தமானவை, அவற்றின் மூலாதாரம் என்ன, அவை திருட்டுப் பொருட்களா என்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வரும் பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.








