• Mon. Nov 11th, 2024

குழந்தைகளுக்கான உயர்தர அறுவை சிகிச்சையில் எழும்பூர் அரசு மருத்துவமனை சாதனை

Byவிஷா

Oct 4, 2024

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், 3 குழந்தைகளுக்கு நவீன கருவி மூலம் உயர்தர அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரெமா சந்திரமோகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது..,
எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சமீபத்தில் 3 முக்கியமான அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன.
செய்யாறு பகுதியைச் சேர்ந்த நிவாஸ் என்ற ஒரு வயது குழந்தையின் நெஞ்சுப்பகுதியில், உணவுக்குழாய் மற்றும் சுவாசக் குழாயைஅழுத்தி கொண்டு 4 செ.மீ அளவில் கட்டி இருந்துள்ளது. பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடைசியாக மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையை பெற்றோர் அனுமதித்தனர்.
பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு, 3 மில்லி மீட்டர்அளவு கொண்ட நவீன கருவி மூலம், வாட்ஸ்-கீஹோல் உயர்தரஅறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அந்த கட்டி அகற்றப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த வெங்கட்மது என்ற 5 வயது குழந்தை வயிற்றுப் பகுதியில் மிகப்பெரியகட்டி இருந்தது.
பல மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று குணமாகாத நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில் புற்றுநோய் கட்டி என தெரிந்தவுடன், ஒரு கிலோ எடை உள்ள கட்டியை அகற்றி, வயிற்று சுவர் மறு சீரமைப்பு செய்து குழந்தையை நலமாக வீட்டுக்கு அனுப்பிவைத்தோம்.
இதேபோல், வில்சன் நோயால் பாதிக்கப்பட்ட வேளச்சேரியைச் சேர்ந்த ரித்திக் என்ற 5 வயதுசிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், மூச்சுத் திணறலுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு பரிசோதனை மேற்கொண்டதில், வலது பக்கத்தில் உள்ள உதரவிதானம் பலவீனமடைந்து, துளை ஏற்பட்டு வயிற்றுக் குடல், நெஞ்சறை உள் நுழைந்து நுரையீரலை அழுத்திக் கொண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நுண் துளை அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் உதரவிதானம் வலுவாக்கப்பட்டது.
திறமையான பல டாக்டர்கள் குழு மூலம் இதுபோன்ற அறுவைசிகிச்சைகள் செய்யப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *