• Sun. Mar 16th, 2025

எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்- செங்கோட்டையன் பேட்டி

ByA.Tamilselvan

Mar 16, 2023

மிக விரைவில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று அ.தி.மு.க. சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எம்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.
இதைத்தொடர்ந்து செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்தார். விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறை அவருக்கு பாதுகாப்பு அளிப்பதை விட்டு வழக்கு பதிவு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம். முன்னாள் முதல்-அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது இந்த அரசு வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதுபோன்று செயலில் இனி ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அதிமு.வில் உள்ள அத்தனை பேரும் எந்த தியாகத்தையும் செய்வோம். உச்சநீதிமன்றமே அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அவர் சார்பில் நீக்கப்பட்டது அனைத்தும் செல்லும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளது. எனவே அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் எடப்பாடி பழனிசாமி வரப்போகிறார். மிக விரைவில் அவர் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.