• Sat. Apr 13th, 2024

ராவணக்கோட்டம் தயாரிப்பாளர் ஏமாற்றப்படுகிறாரா?

தங்கத் தட்டை கையில் கொடுத்தாலும் அதனை தகர தட்டாக மாற்றிவிடும் நடிகர் சாந்தனு பாக்யராஜ்.

தமிழ் சினிமாவில் சாதனை படைத்த ட்ரெண்ட்செட்டராகவே மாறிய சுப்ரமணியபுரம் திரைக்கதையை நிராகரித்த தீர்க்கதரிசி சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ராவண கோட்டம்.

பாலுமகேந்திராவின் மாணவர், ஆடுகளம் படத்தின் வசனகர்த்தா, ஜாதிய வன்மத்தையும், வக்ரத்தையும் வஞ்சகமில்லாமல் பதிவு செய்த மதயானை கூட்டம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்ரம்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

சாந்தனு பாக்யராஜ் திரைப்பட நாயகனாக அறிமுகமாகி 15 வருடங்கள் கடந்துவிட்டாலும் அவர் நடிப்பில் வெளியான எந்தப்படமும் திரையரங்குகளில் ஒரு வாரம் தாக்குப் பிடித்ததில்லை.அப்படிப்பட்ட நடிகர் நடிக்கும் படத்தை தயாரிக்கவும் தயாரிப்பாளர் இருக்கிறாரா எனக் கேட்பவர்களுக்கு ஆமாம் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.திரைக்கதை மன்னர் இயக்குநர் பாக்யராஜின் தீவிர ரசிகரும், நண்பருமான கண்ணன் ரவி தயாரித்திருக்கும் படம்தான் ராவண கோட்டம்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நாளை மாலை நடைபெற உள்ளது இந்த நிகழ்வில் தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் தயாரிப்பாளர் அதில் சென்னையில் இருக்கும்
சினிமா பத்திரிகையாளர்களும் அழைத்துசெல்லப்படுகிறார்கள். அதனால் சர்ச்சைகள் எழுந்துள்ளதாக கடந்த சில நாட்களாக சினிமா வட்டாரத்தில் விவாத பொருளாக இருந்து வருகிறது.தயாரிப்பாளரால்நம்பி ஒப்படைக்கப்பட்ட பணியை தங்களுக்கு சாதகமானவர்களையும், குடும்ப உறுப்பினர்களையும், பத்திரிகை துறைக்கு சம்பந்தமில்லாதவர்களையும் துபாய்க்கு அழைத்து செல்ல பயன்படுத்திக்கொள்வதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.ஆடியோ நிகழ்ச்சிகளில் மைக்செட் அமைப்பவரும் பத்திரிகையாளர், தினமலர் நிருபரும் பத்திரிகையாளர், தமிழ் சினிமாவை கழுவி கழுவி
ஊற்றும் யூடியுபர்களும் பத்திரிகையாளர்கள் என பட்டியலிடப்பட்டு அழைத்துசெல்லப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

18 பேர் மட்டுமே என தொடங்கிய பத்திரிகையாளர்கள் பட்டியல் தற்போது 48 வரை என எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் மூலம் அழைத்து செல்ல பொறுப்பு கொடுக்கப்பட்டவர்களின் தகுதியின்மையையும், சுயநலம், மிரட்டலுக்கு அடிபணிந்ததை அப்பட்டமாக உணர்த்துகிறது என்கின்றனர் பத்திரிகையாளர்கள்.

சென்னையில் நடக்கும் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு அதிக எண்ணிக்கையில் பத்திரிகையாளர்கள் வருகிறார்கள் இதனால் செலவு அதிகமாகிறது இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசினார்கள், செய்தி தொடர்பாளர்கள் சங்கத்தில் பேசினார்கள் ஆனால் அப்படி பேசியவர்கள்தான் துபாய்க்கு இங்கிருந்து பத்திரிகையாளர்களை அழைத்து செல்வதில் தீவிரமாக உள்ளனர்.

என்ன காரணமாக இருக்கும், இதனால் ராவண கோட்டம் படத்தின் வியாபாரம் அதிகரிக்குமா, தயாரிப்பாளருக்கு என்ன பயன் என்கிற கேள்விகளுடன் இந்நிகழ்வு சம்பந்தபட்டவர்களையும், தயாரிப்பாளர்கள், மூத்த பத்திரிகையாளர்களிடமும் பேசியபோது தயாரிப்பாளரின் ஆர்வத்தையும், அவர் நம்புவதையும் தவறாக பயன்படுத்தி அதன் மூலம் பணப் பயன், பலனடையும் செயல் இது என்றனர்.

காலங்காலமாக வெளிநாடுவாழ் இந்தியர்கள், புதிதாக படமெடுக்க வரும் பசையுள்ளவர்களை சுரண்டி கொள்ளையடிக்கும் கூட்டம் கோடம்பாக்கத்தில் எப்போதும் உண்டு அது தான் இப்போது நடக்கிறது என்கின்றனர்.

தமிழகத்தை சேர்ந்த கண்ணன் ரவி துபாயில் கே ஆர்சி குரூப் எனும் பெயரில் தொழில் செய்து வருகிறார்.பாக்யராஜின் தீவிர ரசிகர், குடும்ப நண்பர் கண்ணன் ரவி பாக்யராஜ் மீது இருக்கும் அதீத நம்பிக்கை காரணமாக 15 ஆண்டுகளாக ஒரு வெற்றிப்படத்தை கூட தர முடியாத சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் திரைப்படதயாரிப்பில் முதலீடு செய்ய முன் வந்து தொடங்கப்பட்ட படம் தான்” ராவண கோட்டம்”கண்ணன் ரவி தொழிலதிபராகஇருக்கும் துபாயில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தி பிரமிப்பை ஏற்படுத்துவதன் மூலம் என்ன பயன்கிடைத்துவிடும்? என்ற போது சக தொழிலதிபர்கள், நண்பர்கள் மூலம் முதலீட்டை குவிக்கலாம் என்கிற நோக்கமாக கூட இருக்கலாம் என்கின்றனர்.முன்பெல்லாம் மலேசியா, சிங்கப்பூருக்கு சுற்றுலா என்பதன் பெயரால் குருவிகளை அழைத்து செல்வது வழக்கம். அது போன்று பத்திரிகையாளர்கள் என்கிற பெயரில் குருவிகளை அழைத்து சென்று வரும் செயலாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.இது சம்பந்தமாக சினிமா விழாக்களுக்குபத்திரிகையாளர்களை அழைத்து செல்லும் வழக்கம் எப்போது இருந்து தொடங்கியது என மூத்த பத்திரிகையாளர் ஒருவரிடம் கேட்ட போது

இப்போது பத்திரிகையாளர்கள் என PROக்கள் கூட்டும் கூட்டத்தை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. கேமரா ஸ்டாண்டு தூக்குபவர் முதல் தினத்தந்தி நிருபர் வரை இவர்களை பொறுத்தவரை பத்திரிகையாளர்கள்தான்.

அந்த லட்சணத்தில்தான் இங்கு உள்ள பெரும்பான்மையான PRO க்களின் புரிதலும், அறிவும் இருக்கிறது அந்த தொழிலை முழுமையாக புரிந்து, கற்றுக்கொண்டு PRO வேலையை செய்யக்கூடியவர்கள் குறிப்பிட்ட சிலரே இங்கு உள்ளனர்.தான் பணிபுரியும்படம் சம்பந்தமான செய்தியை எழுத தெரியாதவர்கள் எல்லாம் இங்கு PRO க்களாக வலம் வருகிறார்கள் அப்புறம் எப்படி தகுதியான பத்திரிகையாளர்களை இவர்களால் பட்டியலிட முடியும் அதனால்தான் மைக்செட் போட்றவரும் பத்திரிகையாளராக துபாய் போக முடியுது.தகுதியான பத்திரிகையாளன் தவிப்பதை காண முடிகிறது என்றவர் மேலும் கூறுகிறபோது

தொழில்நுட்ப வசதி இல்லாத காலத்தில் அச்சு ஊடகங்கள், வானொலி மட்டுமே மக்களுக்கான தகவல் தொடர்பு சாதனங்கள். அதனால் சினிமா செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லஅச்சு ஊடகங்கள் அத்தியாவசியமானதாக இருந்தது.

பத்திரிகையாளர்கள் நேர்மையாக இருந்ததால் அவர்களது எழுத்துக்கள், விமர்சனங்கள் மீது நம்பகத்தன்மை ஏற்பட்டது. அதனால் ஸ்டுடியோவுக்குள் மட்டும் படப்பிடிப்பு இருந்த போது “ஸ்டுடியோ ரவுண்டப்” என்கிற முறையில் செய்திகள் வெளியானது.

ஸ்டுடியோவை விட்டு வெளிப்புறப்படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட காலங்களில் பத்திரிகையாளர்களை “அவுட்டோர்” அழைத்து செல்லும் வழக்கம் தொடங்கியது.
அப்போது எல்லாம் நடிகர்களை பத்திரிகையாளர்கள் தொடர்புகொள்வதும், சந்தித்து பேட்டி எடுப்பதும் எளிதானது.ஒரு படத்திற்கான அவுட்டோர் பயணம் என்றால் அந்தப்படத்தில் நடிக்கும் அனைவரையும் ஒரே இடத்தில் பேட்டி எடுத்து விட முடியும்.

நட்சத்திரங்களும் பத்திரிகையாளர்களை சந்திக்க ஆர்வமுடன் இருப்பார்கள், அவுட்டோர் அழைத்துசெல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் தாங்கள் பணியாற்றும் பத்திரிகைகளில் அந்தப் படத்தின் செய்திகள்,நடிகர் நடிகைகளின் பேட்டிகள் தொடர்ச்சியாக வெளிவரும் அதனால் அந்தப் படத்திற்கு விளம்பர வெளிச்சம் கிடைப்பதுடன், படத்தை வாங்க விநியோகஸ்தர்களிடம் போட்டி ஏற்பட்டு தயாரிப்பாளருக்கு வருமானம் அதிகரிக்கும்.
நட்சத்திரங்களுக்கும்,தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் புகழ் வெளிச்சம் அதிகரிக்கும்.

திரைப்பட தயாரிப்பில் செய்யப்படும் முதலீடுகளை லாபகரமாக மீண்டும் பெறுவது கடும் போராட்டமாக இருக்கிறது அதனால் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, அவுட்டோர் சந்திப்பு எல்லாம் குறைந்துபோனது, தவிர்க்கப்பட்டு வருகிறது.தொழில்நுட்ப வளர்ச்சி, இணையதளம், தொலைக்காட்சி அதற்கு இணையான வலைத்தளங்களின் அபரிமிதமான வளர்ச்சி திரைப்பட விழாக்கள் உடனுக்குடன் ஒளிப்பரப்பாவதும், இணைய தளங்களில் செய்திகள் உடனுக்குடன் வெளியிடப்படுவது தற்போது எளிதாகி விட்டது.
அச்சு ஊடகங்களில் மட்டுமே செய்திகள் தாமதமாக வருகிறது நிலைமை இப்படி இருக்கும்போது துபாயில் நடக்கும் இசை வெளியீட்டு விழாவுக்கு பல லட்சங்கள் செலவு செய்துஇங்கிருந்து பத்திரிகையாளர்களை அழைத்து செல்வதால் தயாரிப்பாளருக்கும், படத்திற்கும் என்ன பயன் கிடைத்துவிடும்.தினசரி பத்திரிகையாளர்கள் கடந்த காலங்களை போல பக்கம் பக்கமாக சிறப்பு செய்திகளை வெளியிட முடியுமா? நிகழ்ச்சி தொடங்கிய அந்த நொடியிலேயே புகைப்படங்களும், செய்திகளும் இணையத்தில் வெளியாகிவிடும்.

அப்புறம் எதற்கு இங்கிருந்து அழைத்து செல்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை அதற்காகும் செலவில் இங்கு பத்துமுறை பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தலாம்.

அச்சு ஊடகம், இணையதளங்கள், தொலைக்காட்சிகளில் அதிகமான விளம்பரங்களை வெளியிடலாம் இதனை தயாரிப்பாளருக்கு எடுத்துக் கூறி புரியவைக்க வேண்டியது பத்திரிகை தொடர்பாளரின் பொறுப்பும், கடமையும் கூட.ஆனால் இங்கு நல்லPRO வாக, நேர்மையான பத்திரிகையாளராக, நல்ல தயாரிப்பாளராக இருப்பதை காட்டிலும் மிக சிறந்த புரோக்கர் வேலை செய்பவர்களுக்கே திரைப்பட முதலீட்டாளர்களிடமும், நட்சத்திரங்களிடமும் முக்கியத்துவம் கிடைக்கிறது. அவர்களை பொறுத்தவரை எதிர்த்து பேசாத, விவாதிக்காத அடிமைகள் மட்டுமே தேவைப்படுகிறது.

அதனால்தான் இங்கு புத்திசாலி PRO க்கள், தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் உரிய அங்கீகாரம் இன்றி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் லிங்கா படத்தை வாங்கி வெளியிட்ட மதன் இன்றைக்கு சினிமாவில் இல்லை.அவருக்கு தவறான ஆலோசனை கூறி அதிக விலைக்கு அந்தப் படத்தை வாங்குவதற்கு புரோக்கராக பணியாற்றியவர்
ஒரு கோடி ரூபாய் கமிஷன் வாங்கி அதில் பென்ஸ்கார் வாங்கி பவனி வர முடிகிறது.

மதன் தலைமறைவாகி இப்போது என்ன செய்கிறார் என்பதே தெரியாமல் போனது. ஆனால் தவறான ஆலோசனை கூறியவர், வழிகாட்டியவர் சங்கங்களில் நிர்வாகியாக பதவியில் இருக்க முடிகிறது.தயாரித்த படத்தை வெளியிட முடியாதவர் வழிகாட்டல் எப்படி இருக்கும்? இளங்கன்று பயமறியாது என்பார்கள் அது போன்றுதான் திரைப்பட தயாரிப்பில் முதலீடு செய்ய புதிதாக வருபவர்கள் ஆர்வம் காரணமாக இப்படிப்பட்ட தவறானவர்கள் வழிகாட்டலில் சிக்கிக்கொள்கிறார்கள் என்ன செய்ய முடியும் அதற்கு “ராவண கோட்டம் “தயாரிப்பாளர் கண்ணன் ரவி விதிவிலக்கல்ல என்றார்.

மூத்த தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசிய போது

இங்கு சொந்த பணம் போட்டு படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஒரு சிலரே. மற்றவர்கள் எல்லாம் பைனான்சியர்களிடம் கடன் வாங்கி படம் தயாரிக்கும் தரகு முதலாளிகளே.அப்படிப்பட்டவர்கள் புதிதாக வரும் பசையுள்ள தயாரிப்பாளர்களை வளைத்து போடுவதும், அவர்களுக்கு ஆலோசனை கூறுபவர்களாக, புரோக்கர்களாக பணியாற்றுவது எல்லாக் காலங்களிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது மயக்கம் தெளிந்து தப்பித்தவர்களும் இங்கு இருக்கிறார்கள்.அவர்களின் உபசரிப்பில் மயக்கம் தெளியாமல் மூலதனத்தை இழந்து மதன் போன்றுகாணாமல்போனவர்களும் இங்கு ஏராளமாக உள்ளனர்.சாந்தனு நடிக்கிற படத்துக்கு வெளிநாட்டில் இசை வெளியீட்டு விழா, அதற்கு இங்கிருந்து ஆட்களை அழைத்து செல்வது காமெடியாகத்தான் இருக்கிறது தயாரிப்பாளர் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட தயாரிப்பாளர்கள் இது போன்ற செயல்களை ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ மாட்டார்கள். இங்கு எல்லாமே தலைகீழாக இருக்கிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *