


குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளக்கூடாது என்று மதிமுக எம்.பி துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அதனைப் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆளுநரை விஜய் நேரில் சந்தித்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாகாரம் செய்யப்பட்டது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெஞ்சல் புயல் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் மனு கொடுத்தார். இந்த நிலையில் நாளை (ஜனவரி 26) நடைபெறும் தேநீர் விருந்தில் விஜய் கலந்து கொள்வாரா இல்லை புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் விஜய், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க வேண்டும் என்று மதிமுக எம்.பி துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் எல்லாம் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளதால் தமிழக வெற்றிக்கழகமும் அதனை புறக்கணிக்க வேண்டும். மேலும் விஜய் மட்டும் ஆளுநரின் தேநீர் விருந்துல் கலந்து கொண்டால் எதிர்காலத்தில் அது கட்சிக்கு கேடாக அமையும். எனவே தேநீர் விருந்தில் விஜய் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.

