தேனி மாவட்டம் கம்பம் புதுபள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் ரோஷன் பாரூக் (65) டிரைவர். இவர், ஜீப்பில் கம்பத்தில் இருந்து கேரள மாநிலம் நெடுகண்டம், கட்டப்பனை உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி சென்று வந்தார். நேற்று இரவு நெடுங்கண்டத்தில் இருந்து ஜீப்பில் பயணிகளை ஏற்றி கொண்டு கம்பம் நோக்கி அவர் வந்து கொண்டிருந்தார்.

கம்பம் மெட்டு மலைப்பாதையில் 5-வது கொண்டை ஊசி வளைவு அருகே வரும்போது, எதிரே வந்த அரசு பஸ்- க்கு வழிவிடுவதற்காக ஜீப்பை ஒதுக்கி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப், எதிர்பாராதவிதமாக பாறையில் மோதி தலை குப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் ரோஷன் பாரூக், ஜீப்பில் பயணம் செய்த உத்தமபாளையம் அருகேயுள்ள பல்லவரா யன்பட்டியை சேர்ந்த தங்கம்மாள், மணிகண்டன், போடி சிலமலையை சேர்ந்த லட்சுமி உள்பட 12 பேர் காயம் அடைந்தனர்.
அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டிரைவர் ரோஷன் பாரூக் உயிரிழந்தார். தங்கம்மாள், மணிகண்டன், லட்சுமி, எம். மணிகண்டன் ஆகிய 4 பெயர்களும் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயம் பட்ட மற்ற 7 பேர்களும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து கம்பம் வடக்கு போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.