• Fri. Apr 19th, 2024

சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு போகவேண்டாம்: டி.ஜி.பி. வேண்டுகோள்

ByA.Tamilselvan

Oct 13, 2022

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் சுற்றுலா விசாவில் போகவேண்டாம் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தகவல்.
தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிய படிப்புக்கு ஏற்ற நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று சமூக வலைதளங்கள் வாயிலாக விளம்பரங்கள் வந்தன. அதை நம்பி தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏஜெண்டுகள் வாயிலாக சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றுள்ளனர். அவர்களை பின்னர் மியான்மர் நாட்டுக்கு அழைத்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர். அந்த 18 பேரும் தமிழக அரசு உதவியுடன் மீண்டும் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்.
அதேபோல கம்போடியா நாட்டுக்கும் சிலர் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டனர். அவர்களும் தமிழக அரசு மூலம் மீட்கப்பட்டுள்ளனர். தமிழக இளைஞர்களை குறிவைத்து இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடியில் ஈடுபட்ட திருச்சியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் ஏஜெண்டுகளாக வேலை பார்த்த ஷாநவாஸ், முபாரக்அலி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதுபோல் சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு யாரும் போகவேண்டாம். வெளிநாட்டு வேலைக்குப் போக விருப்பம் உள்ளவர்கள், குறிப்பிட்ட நிறுவனத்தை அணுகினால் அதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்துகொள்ள 044-28447701 என்ற தொலைபேசி எண்ணில் பேசலாம். உரிய விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *