• Sat. Feb 15th, 2025

ஆடுகள், கன்றுக்குட்டிகளை கடித்து கொல்லும் நாய்கள்

ByP.Thangapandi

Dec 22, 2024

உசிலம்பட்டி அருகே தோட்டத்து பகுதியில் உள்ள ஆடுகள், கன்றுக் குட்டிகளை கடித்து கொல்லும் நாய்கள் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து 4 ஆடுகள் பலி, 1 கன்றுக் குட்டி, 1 ஆடு படுகாயமடைந்த சோக சம்பவம் உசிலம்பட்டி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வில்லாணியைச் சேர்ந்தவர் செல்லமாயன், விவசாயியான இவர் தனது தோட்டத்து பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.

இன்று மதிய வேளையில் வீட்டிற்கு சாப்பிட சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது தோட்டத்தில் நாய்களின் சத்தம் அதிகமாக கேட்டதால் அதிர்ச்சியடைந்து ஓடி வந்து பார்த்த செல்லமாயன் தோட்டத்தில் இருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததில் துடிதுடித்து இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

5 ஆடுகளை கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்த சூழலில் 1 ஆடு உயிருக்கு போராடி கொண்டிருந்த சூழலில் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

மேலும் இதே போல் லிங்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பூங்கொடி என்பவரின் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த பிறந்து 4 நாட்களே ஆன கன்றுக் குட்டியையும் இந்த நாய் கூட்டம் கடித்து குதறியதில் படுகாயமடைந்து துடிதுடித்து இறந்து கொண்டிருக்கிறது. இது குறித்தும் போலீசார் மற்றும் கால்நடைத்துறை மருத்துவருக்கு தகவல் அளித்த சூழலில் அதிக காயத்துடன் உள்ள கன்று உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்தாக கூறப்படுகிறது.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல கடந்த 10 நாட்களில் பல்வேறு தோட்டத்து பகுதியில் உள்ள ஆடுகளை இந்த நாய்கள் கூட்டம் கடித்து கொன்றுவிட்டதாகவும், இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆடு, கன்றுகளை கடித்து கொல்லும் நாய் கூட்டத்தை பிடித்து செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.