உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களில் அதிகமானவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். தற்போது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் அவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.
இந்நிலையில் உக்ரைனில் இந்தியர்கள் அதிகளவில் மருத்துவம் படிப்பதற்கான காரணம் என்ன என்று பார்க்கலாம்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர். உக்ரைனில் படித்து வரும் இந்திய மாணவர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.
உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசு முயற்சி செய்து வருகிறது. போர் காரணமாக உக்ரைனில் இருந்து போலந்துக்கு வரும் மாணவர்கள் அங்கிருந்து இந்தியா திரும்பி வருகின்றனர்.
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பும் மாணவர்களில் ஏராளமானவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். படிப்புகளுக்காக இந்தியர்கள் அதிகமாக வெளிநாடு சென்று வரும் நிலையில் இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்கவே உக்ரைனுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவர்கள் எதற்காக மருத்துவ படிப்புக்கு உக்ரைனை தேர்வு செய்கின்றனர் என்பது குறித்து விபரம் வருமாறு:
இந்தியாவை ஒப்பிடும்போது உக்ரைனில் மருத்துவ படிப்புக்கான செலவு குறைவாகும். இந்தியாவில் தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்பை படித்து முடிக்க ரூ.60 லட்சம் முதல் ரூ.1.1 கோடி வரை செலவாகிறது. நீட் இன்றி உக்ரைனில் 6 ஆண்டு மருத்துவ படிப்பு பயில வெறும் ரூ.15 முதல் ரூ.16 லட்சம் மட்டுமே செலவாகிறது.
மேலும் உக்ரைன் மருத்துவ படிப்பும் உலகளாவிய அங்கீகாரம் பெற்றது. தேசிய மருத்துவ கமிஷனும் இதை அங்கீகரிக்கிறது. இதனால் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் டாக்டராக பணியாற்ற முடியும். மேலும் 2021 நிலவரப்படி இந்தியாவில் 84 ஆயிரம் மருத்துவ சீட்டுக்கு 1.61 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இங்கு மருத்துவ படிப்புக்கு அதிக போட்டி உள்ள நிலையில் உக்ரைனில் போட்டி குறைவாகும்.
உக்ரைனில் 33 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்கட்டமைப்புகள் சராசரியாக உள்ளன. செய்முறை தேர்வுகளில் குறைபாடு ஏற்படலாம். இங்கு மருத்துவ படிப்பை முடித்து இந்தியா திரும்பும் மாணவர்கள் வெளிநாடு மருத்துவ படிப்புக்கான தேர்வு எழுத வேண்டும். இதில் தேர்வு பெறுபவர்கள் டாக்டராக பணியை துவக்கலாம்.
உக்ரைன் தவிர இந்தியர்கள் அதிகமாக சீனா, பிலிப்பைன்ஸ், வங்காளதேசத்தில் மருத்துவ படிப்பை மேற்கொள்கின்றனர். 2021ல் பாராளுமன்றத்தில் இந்திய மாணவர்கள் எந்தெந்த நாடுகளில் படிக்கின்றனர் என்ற கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது. அதில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 930 பேர் அமெரிக்காவிலும், 2 லட்சத்து 19 ஆயிரம் பேர் ஐக்கிய அரபு எமிரேட்சிலும், 2 லட்சத்து 15 ஆயிரத்து 720 பேர் கனடாவிலும் படித்து வருவதாக கூறப்பட்டது.
இதுதவிர ஆஸ்திரேலியாவில் 92 ஆயிரத்து 383 பேர், இங்கிலாந்தில் 55 ஆயிரத்து 465 பேர், சீனாவில் 23 ஆயிரம் பேர், ஜெர்மனியில் 20,810 பேர், உக்ரைனில் 18,000 பேர், ரஷ்யாவில் 16,500 பேர், பிலிப்பைன்சில் 15,000 பேர் படிப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்தது.