• Thu. Mar 28th, 2024

மருமகனோ,மருமகளோ உள்ள குடும்பம் உங்களுடையதா? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் 10 ஆலோசனைகள்

ByA.Tamilselvan

May 6, 2022

மருமகனோ,மருமகளோ உள்ள குடும்பம் உங்களுடையதா? உங்களுக்குத்தான் இந்த 10 கட்டைளைகள்.நெருங்கிய உறவுகளாக இருந்தாலும் தவறான புரிந்து கொள்ளும் காரணத்தால் பல பிரச்சனைகள் ஏற்பட்டுவிடுகின்றன.திருமணமான சில ஆண்டுகளிலேயே விவகாரத்து செய்யும் அளவுக்கு இன்றைய சூழல்மாறியிருக்கிறது. பல ஆண்டுகளாக குடும்பநல வழக்குகளை கையாண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் அனுபவங்களிலிருந்து குடும்ப அமைதிக்கு 10 ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள்.
1) உங்கள் மகன் மற்றும் மருமகளை உங்களோடு ஒரே வீட்டில் இருக்க நிர்ப்பந்திக்க வேண்டாம்.வாடகை வீட்டிலாவது தனியாக குடியிருக்கச் செய்யுங்கள்.தங்களுக்கென்று ஒரு குடியிருப்பை தேடிக் கொள்வதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எவ்வளவு இடைவெளி ஏற்படுத்துகிறீர்களோ அவ்வளவு பிரச்சனைகளை உங்கள் மருமக்களோடு தவிர்க்கலாம்.
2) உங்கள் மருமகளை உங்கள் மகள் போல பார்த்துக் கொள்ள வேண்டாம்.உங்கள் மகனின் மனைவியாகவே நினைத்துக் கொள்ளுங்கள்.அல்லது அவளை ஒரு தோழியாக பாருங்கள்.உங்கள் மகன் உங்களுக்கு கீழ்ப்பட்டவன் என்று நினைப்பது போல் அவன் மனைவியும் உங்களுக்கு கீழ்ப்பட்டவள் என்று நினைத்து திட்டி விடாதீர்கள்.ஏனென்றால் அவள் காலத்திற்கும் அதை நினைவில் வைத்திருப்பாள்.தன்னை திட்டுவதற்கும்,சரிப்படுத்துவதற்கும் தன்னுடைய தாயாருக்கே அன்றி வேறொருவருக்கும் உரிமையில்லை என்று எண்ணுவாள்.
3) உங்கள் மகனின் மனைவி எப்படிப்பட்ட பழக்கவழக்கம் மற்றும் குணமுடையவராயிருந்தாலும் அது உங்களை பாதிக்க வேண்டாம்.அது முற்றிலும் உங்கள் மகனின் பிரச்சனை.உங்கள் மகன் முதிர்ந்தவனாகவும்,மனப்பக்குவமுள்ளவனாகவும் இருப்பதால் இதை உங்கள் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
4) சில சமயம் கூட்டாக வாழும் போது வீட்டு வேலைகளை குறித்து தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்.நீங்கள் அவர்கள் துணிகளைத் துவைப்பதற்கும் அவர்கள் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டுவதற்கும் எந்த அவசியமும் இல்லை.உங்கள் மருமகள் உங்களிடம் உதவி கேட்டால் உங்களால் முடிந்தால் செய்து கொடுங்கள்.பதிலுக்கு எந்த நன்றியையும் எதிர்பாராதிருங்கள். மேலும் உங்கள் மகனின் குடும்பத்தைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.அவர்கள் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்.
5)உங்கள் மகன் மற்றும் மருமகள் சண்டையிடும் போது காது கேளாதோர் போல் இருந்து கொள்ளுங்கள்.இளம் தம்பதியர் தங்கள் பிரச்சனைகளில் பெற்றோர் தலையிடுவதை விரும்புவதில்லை.
6)உங்கள் பேரக்குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.குழந்தைகளை எவ்விதம் வளர்க்க வேண்டும் என்பது உங்கள் பிள்ளைகளை பொறுத்த ஒன்று.நற்பெயரோ அவப்பெயரோ அது உங்கள் பிள்ளைகளையே சாரும்.
7) உங்கள் மருமகள் உங்களை கவனிக்கவும் நேசிக்கவும் அவசியமில்லை.அது உங்கள் மகனின் கடமை.இதை உங்கள் மகனுக்கு நீங்கள் புரிய வைத்திருப்பீர்களானால் உங்களுக்கும் உங்கள் மருமகளுக்கும் நல்ல உறவு அமையும்.
8) நீங்கள் பணி ஓய்வு பெற்ற பின் உங்கள் பிள்ளைகளை சார்ந்து கொள்ளாதீர்கள்.உங்கள் காரியங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.உங்கள் வாழ்வில் நீங்கள் கடந்து வந்த பாதைகளை தனியே சமாளித்த உங்களால் இனி வரும் காலத்தையும் பார்த்துக் கொள்ள முடியும்.இன்னும் புதிய அனுபவங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்.
9)உங்கள் பணி ஓய்வு காலத்தை சந்தோஷமாக வாழுங்கள்.நீங்கள் சம்பாதித்த உங்கள் பணத்தை உங்கள் நலனுக்காக செலவு செய்யுங்கள்.உங்கள் மகனிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து விடவேண்டாம்.இறுதியில் உங்கள் பணம் உங்களுக்கு பயனில்லாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது.
10)உங்கள் பேரக்குழந்தைகள் உங்கள் சொத்தல்ல.அது உங்கள் பிள்ளைகளின் விலையேறப்பெற்ற பரிசு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இந்த ஆலோசனைகள் உங்கள் குடும்பம் அமைதியாகவும்,மகிழ்ச்யாகவும் இருக்க உதவும் 10 கட்டளைகளாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *