
எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்குநர் கரு.பழனியப்பன் நடிப்பில் ‘கள்ளன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். மேலும் நமோ. நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தர்ராஜா, நிகிதா,மாயா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வி.மதியழகன், எஸ்.ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பில் இருக்கும் இப்படம் வரும் மார்ச் 18ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது!
இந்நிலையில் இப்படத்தை தடை செய்ய வேண்டுமென்று தென் மாவட்டங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. கள்ளன் என்ற பெயரில் எடுக்கப்படும் இந்த திரைப்படம் கொள்ளை கூட்ட செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளதால், இது கள்ளர் சமூகத்தின் பெயரை களங்கப்படுத்தும் வகையிலும் உள்ளதாக தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் இப்படத்துக்கு எதிராக மதுரை நகரில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாடு கள்ளர் முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் சரவண தேவர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த திரைப்படத்தினால் தென் மாவட்டங்களில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் இந்த கள்ளன் திரைப்படத்தை திருச்சி மாவட்ட திரையரங்குகளில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
