• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

‘பொங்கல் பரிசு’ விவகாரத்தில் பொங்கிய திமுக மகளிரணியினர்

Byவிஷா

Jan 25, 2025

கடலூர் மேற்கு மாவட்டத்தில் பொங்கல் பரிசு விவகாரத்தில், தங்களுக்கு பாரபட்சம் காட்டுவதாகக் கூறி திமுக மகளிரணியினர் பொங்கி எழுந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கடலூர் மேற்கு மாவட்ட திமுக-வில் தொண்டரணி, இளைஞரணி, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, மகளிரணி நிர்வாகிகளுக்கும் இம்முறை பொங்கல் பரிசு வழங்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இதில்தான் மகளிரணியினருக்கு பாரபட்சம் காட்டியதாக பொல்லாப்புக் கிளம்பி இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மகளிரணியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு தரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மற்றவர்களுக்கு ‘பொங்கல்’ தான் எனப் புலம்புகிறார்கள் சங்கராபுரம் தொகுதி மகளிரணி நிர்வாகிகள். பொங்கல் பண்டிகைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலுதான் திமுக-வினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை 5 விதமான பைகளில் வைத்து வழங்கினார். இதில், மாநில மகளிரணி துணைச் செயலாளரான அங்கையற்கண்ணிக்கு வழங்கிய பொங்கல் தொகுப்பு பையில் ரூ.50 ஆயிரம் ரொக்கம் இருந்ததாம்.
அதுவே மாவட்ட மகளிரணி அமைப்பாளரான கலாவுக்கும் வழங்கப்பட்ட பையில் ரூ.10 ஆயிரம் தான் இருந்துள்ளது. மற்றபடி மகளிரணியின் ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு மட்டும் தான் கைக்குக் கிடைத்ததாம். இந்த ‘அன்பளிப்பு’ விவகாரம் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் மத்தியில் இப்போது பெரும் விவாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதுகுறித்து திமுக மாநில மகளிரணி துணைச் செயலாளர் அங்கயற்கண்ணியிடம் கேட்டதற்கு, “மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமையில் இருந்து பொங்கல் பரிசு கொடுத்தது உண்மைதான். எனக்கும் ரூ.50 ஆயிரம் கொடுத்தார்கள். அதேசமயம், கட்சியின் இதர நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு தரவேண்டியது அந்தந்த தொகுதி எம்எல்ஏ-க்கள் பொறுப்பு” என முடித்துக் கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கலாவிடம் கேட்டதற்கு, “எனக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தாங்க. நகர, ஒன்றிய நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு எதுவும் தரல” என்று சொல்லிவிட்டு கப்சிப் ஆனார். “கட்சியின் மற்ற அமைப்புகளைச் சார்ந்த அத்தனை நிர்வாகிகளுக்கும் பொங்கல் பரிசு கொடுத்திருக்கும் போது மகளிரணிக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்?” எனக் கேள்வி எழுப்பும் கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக மகளிரணியினர், “கட்சிக் கூட்டத்திற்கு பெண்களை திரட்டுவதற்கும், தேர்தலின் போது வீடு வீடாகச் சென்று ஓட்டுக் கேட்பதற்கும் மட்டும் தான் நாங்களா? ஆயிரம் தான் நியாயம் பேசினாலும் திமுக-விலும் ஆணாதிக்கம் தான் மேலோங்கி நிற்கிறது.

பொங்கல் முடிந்துவிட்டாலும் இதுகுறித்து திமுக மகளிரணியை மேற்பார்வை செய்யும் கனிமொழியிடம் எங்கள் ஆதங்கத்தைக் கட்டாயம் சொல்லத்தான் போகிறோம்” என்று அழுத்தமாகச் சொல்கிறார்கள்.