திருப்பரங்குன்றம் மலை மீது ராமநாதபுரம் மாவட்ட எம்.பி நவாஸ்கனி அசைவ உணவு உண்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் உள்ளது. அங்கு தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு கோழிகளை பலியிட வேண்டும் என இஸ்லாமிய மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு ஆடு கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டது. இரு தரப்பிடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சென்ற வக்பு வாரிய தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் ராமநாதபுரம் எம்பியுமான நவாஸ் கனி குறிப்பிட்ட சில அமைப்புகளுடன் அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவருடன் வந்தவர்கள் பிரியாணி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை நவாஸ் கனியும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கோவிலில் மலையில் அமர்ந்து நவாஸ் கனி அசைவ உணவு சாப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த நவாஸ் கனி திருப்பரங்குன்றம் மலையில் நான் பிரியாணி சாப்பிட்டேன் என நிரூபிக்காவிட்டால் அண்ணாமலை பதவி விலகுவாரா? அவர் சொன்ன குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் தமிழக பாஜக தலைவரின் பொறுப்பில் இருந்து பதவி விலக வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் தனது ஆதரவாளர்களுடன் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு உண்ணும் புகைப்படத்தை நவாஸ் கனி அவரது சமூக வலைதள பக்கத்திலேயே பகிர்ந்து இருந்த நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை. முதலில் தான் அசைவ உணவு சாப்பிட்டதாக கூறிய அண்ணாமலை தற்போது தன் உடன் வந்தவர்கள் அசைவு உணவு சாப்பிட்டதாக கூறி இருப்பது முரண்பாடாக இருப்பதாகவும், மத கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் அண்ணாமலை செயல்படுவதாக நவாஸ் கனி பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் நவாஸ்கனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் அளித்துள்ளனர் பாஜகவினர்.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவரான தரணி முருகேசன் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர்,” நவாஸ் கனி புனித தலமாக இந்துக்கள் கருதும் திருப்பரங்குன்ற மலையில் தன் உடன் வந்தவுடன் அசைவ உணவு சாப்பிட்டு உள்ளார். மேலும் மத கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவர் செயல்பட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலையின் புனித தன்மையை கெடுத்ததோடு, மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் அவர் செயல்பட்டுள்ளார். மதநல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்ட அவர் மீது ராமநாதபுரம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
நவாஸ்கனி எம்.பி மீது பாஜக பரபரப்பு புகார்
