• Wed. Apr 24th, 2024

மூடுவிழா நடத்தும் ஆட்சிதான் திமுக ஆட்சி-கே.டி.ராஜேந்திரபாலாஜி காட்டம்

Byதரணி

Mar 6, 2023

மக்கள் நலன் திட்டங்களை நிறுத்திவிட்டு மூடு விழா நடத்துகின்ற ஆட்சியாகதான் திமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருகின்றது சிவகாசியில் நடைபெற்ற அம்மா பிறந்த நாள்விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி காட்டம்
அண்ணா திமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி யார் ஆணைக்கிணங்க விருதுநகர் மேற்கு மாவட்டம், சிவகாசி சட்டமன்றத் தொகுதி, சிவகாசி மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் சிவகாசி அருகே ஹெவுசிங் போர்டு தேவர்குளத்தில் நடைபெற்றது. அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,


கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாள்விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் புரட்சித்தலைவர் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடினோம். அம்மாவுடைய காலத்திலும் மறைவிற்குப் பிறகும் தமிழகம் முழுவதிலும் அம்மாவுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகின்றோம். திமுகவினர் பிறந்த நாளை கொண்டாடினால் அண்டா, குண்டாவை அடகு வைத்து அவர்கள் வைத்திருக்கும் உண்டியலில் நாம் போட வேண்டும். ஆனால் அண்ணா திமுகவினர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளை கொண்டாடும்போது ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவார்கள். முடிந்த உதவிகளை செய்வார்கள். ஒன்றுமே இல்லை என்றாலும் கூட புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி படத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி பொங்கல், இனிப்புகள் வழங்குவார்கள். இப்படி கொடுத்து கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தமான இயக்கம் அண்ணா திமுக இயக்கம்.
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் இதுவரை எந்த பணிகளும் செய்யவில்லை. சிவகாசியில் உள்ள நீதிமன்றம், இந்த பகுதியில் உள்ள சாலைகள், சிவகாசியில் அரசு கல்லூரி, சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைபிரிவு, 16 கால்நடை மருத்துவமனைகள், சிவகாசி முழுவதிலும் 18 அம்மா மினி கிளினிக்குகள் அனைத்தையும் அதிமுக ஆட்சியில் அம்மா ஆட்சியில், எடப்பாடியார் ஆட்சியில் நான்தான் கொண்டு வந்தேன். இன்றைக்கு பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் கிடையாது, ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்ட மிக்ஸி கிடையாது, பேன் கிடையாது, அம்மா பரிசு பெட்டகம் கிடையாது, தாலிக்கு தங்கம் கிடையாது. திருமண உதவித்தொகை கிடையாது, மக்கள் நலன் திட்டங்களை நிறுத்தி விட்டு மூடு விழா நடத்துகின்ற ஆட்சியாகதான் திமுக ஆட்சி உள்ளது. திறப்பு விழா நடத்துகின்ற ஆட்சியாக திமுக ஆட்சி இல்லை. இந்த ஆட்சி தேவையா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் முதியோர் உதவித்தொகை ஏராளமான முதியவர்களுக்கு அண்ணா திமுக ஆட்சியில் கொடுத்தோம். தற்போது திமுக ஆட்சியில் பாதிப்பேர்களுக்கு முதியோர் உதவித் தொகையை நிறுத்திவிட்டனர். . விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கின்றது. நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்றத் தேர்தல் வரலாம். எப்போது தேர்தல் நடைபெற்றாலும் அண்ணா திமுகவிற்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருக்க கூடிய எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். எடப்பாடியாருக்கு ஆதரவு கொடுங்கள். இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்களியுங்கள். வெற்றி பெற எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். உங்களுக்காக உழைக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று பேசினார்.இந்நிகழ்ச்சியில் கட்சித்தொண்டர்கள்,நிர்வாகிகள், உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *