பாலியல் ரீதியாக தனது மகளை துன்புறுத்திய திமுக ஊராட்சிமன்ற தலைவர் மகனை கைது செய்ய கோரி விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தாயும் மகனும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கங்குடி கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த செந்தாமரை. இவரது மகன் சுலைமானும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சுலைமான் சிறுமிக்கு செல்போன் வாங்கி கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த சிறுமியின் தாய் தெய்வானை, மகன் ராஜா ஆகியோர் செல்போனை சிறுமியிடம் இருந்து பறித்து சுலைமானிடம் கொடுக்க சென்றனர். இந்நிலையில் அவரது தாய் செந்தாமரை உள்ளிட்ட 7 பேர் இருவரையும் தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளனர். பாலியல் ரீதியாக தனது மகளை துன்புறுத்திய சுலைமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் வந்த தெய்வானையும் அவரது மகனும் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.