• Sun. Mar 26th, 2023

தி.மு.க அரசு மீது அண்ணாமலை அடுக்கடுக்காக குற்றச்சாட்டு

ByA.Tamilselvan

Jun 5, 2022

தாய் – சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டதாலும் , தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்ததாலும் தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் . அப்போது பேசிய அவர், “திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. முதலமைச்சர் குடும்பத்திற்கும் இதில் தொடர்பு இருக்கிறது

அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட கர்பிணிகளுக்கான அம்மா பெட்டகம் , வெறுமனே ஊட்டச்சத்து கிட் என இப்போது அழைக்கப்படுகிறது. அதில் இடம்பெற்றுள்ள Pro pl health mix எனும் தனியார் நிறுவன பொருளுக்கு பதிலாக ஆவின் நிறுவன health mix பயன்படுத்தலாம் என பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை அதிகாரிகள் , மாநில அரசின் திட்டக் குழுவினர் மார்ச் மாதம் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் ஏப்ரல் மாதம் அரசின் நிர்பந்ததாத்தால் அதை நிராகரித்துள்ளனர்.

கர்ப்பிணிகளுக்காக 2 ஆண்டுகளுக்கு ரூ. 23 லட்சத்து 88 ஆயிரம் கிட்களை தமிழக அரசு வாங்குகிறது. இதில் அனிதா டிக்ஸ் காட் மூலம் கர்ப்பிணிகளுக்கு 8 பொருட்கள் வழங்கப்படுகிறது. அனிதா டிக்ஸ் காட் நிறுவனத்திற்கு ரூ.450 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

உயிருக்கே அச்சம் தரும் பொங்கல் தொகுப்பை வழங்கியது இந்த நிறுவனம்தான். ஆவின் பொருளை காட்டிலும் தனியார் health mix 60 சதவீதம் விலை அதிகம். திமுகவை சேர்ந்த ஆடிட்டர் சண்முகராஜ் , திமுக எம்எல்ஏ மகன் அண்ணாநகர் கார்த்திக்தான் முதல்வர் குடும்பம் சார்பாக பேசுவதாக கூறி இந்த விதிமீறலை செய்துள்ளனர்.

ஆவினுக்கு வழங்காமல் pro pl health mix க்கு மீண்டும் கொடுத்ததால் தமிழக அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ரூ.100 கோடி பணம் கைமாறியுள்ளது, அது யாருக்கெல்லாம் சென்றிருக்கும் என்பது இனிதான் தெரியவரும்.

nutrition கிட்டில் கர்ப்பிணிகளுக்கான இரும்புச் சத்து டானிக்குகள் அனிதா டிக்ஸ் காட் மூலம் வாங்கியதால் ரூ.32 கோடி மாநில அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது . இவை இரண்டின் காரணமாக மொத்தமாக தமிழக அரசுக்கு 77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது

G square முன்னேற்றக் கழகமாக சென்னை சிஎம்டிஏ மாறி உள்ளது. நிலத்தை பதிவு செய்வதற்கு குறைந்தபட்சம் 200 நாள் ஆகும். ஆனால் G square கோவையில் 122 ஏக்கர்களுக்கான லே அவுட் 8 நாளிலே பெற்றுள்ளனர். G square ன் 15 பெரிய மனை நில வளர்ச்சிப் பணிகளை 20 நாளுக்குள் செய்துள்ளனர். திமுகவின் விஞ்ஞான ஊழல் இது. சிஎம்டிஏ.,வில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூறியது. ஆனால் G square பதிவு செய்யும் நேரத்தில் மட்டுமே ஆன்லைன் பதிவு open ல் இருக்கிறது. G square க்கு உதவ திமுகவினர் சிஎம்டிஏ வில் , சிஇஓ எனும் புதிய பொறுப்பை உருவாக்கியுள்ளனர் .

G square 6 நிறுவனத்தை புதிதாக தொடங்கியுள்ளனர். ஐதராபாத் , பெங்களூரில் அவற்றை தொடங்கியுள்ளனர். வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி இதற்கு பதில் கூற வேண்டும். அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக அவர் செயல்படுகிறார். திமுகவிற்கு , முன்னர் 2ஜி முடிவுரை எழுதியது போல , தற்போது G square என்ன செய்யப்போகிறது என காத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆவின் பொருளை புறக்கணித்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளிக்க உள்ளோம். நடவடிக்கை இல்லை எனில் நீதிமன்றத்தை நாடுவோம். G square குறித்து குற்றம் சாட்டினால் பத்திரிகையாளர்கள் மீது கூட அவசரம் காட்டி வழக்கு பதிகின்றனர். பாஜக இதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. செய்தித்தாள் விளம்பரங்களில் G square விளம்பரம்தான் இருக்கிறது. அவர்களை தவிர யாருக்கும் பெரிய அளவிலான மனை நிலங்கள் பதிவு செய்யப்படுவதில்லை.

அம்மா கிட் மா.சுப்பிரமணியனின் துறைதான் என்றாலும் அவர் மீது நாங்கள் புகார் வைக்கவில்லை. ஏனெனில் இரு தனி நபர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கமிஷன் பெற்றாரா என தெளிவுபடுத்த வேண்டும்.

G square ல் அமைச்சர் முத்துசாமி மீது எங்களது நேரடி குற்றச்சாட்டை முன்வைக்கிறோம். முதல்வர் சம்பந்தப்பட்டுள்ளார் என சொல்லவில்லை. முதல்வர் தலையிட வேண்டும் என்று சொல்கிறோம் . முதல்வர் குடும்பத்தினருக்கு இதில் தொடர்பு உள்ளது. எனவே முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனத்தை இன்னும் ஏன் முதல்வர் தடை செய்யவில்லை. 20 ஆம் தேதிக்கு மேல் திமுகவின் ஊழல் , சட்ட மீறல் செயல்பாடுகள் குறித்து புத்தகமாக ஆளுநரிடம் வழங்க உள்ளோம்.

தமிழகத்தில் இருந்து தேர்வாகும் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகள் குறைந்து வருகின்றனர். 42 பேர்தான் தேர்வாகியுள்ளனர் என்பதை ஏற்க முடியாது. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழத்திலிருந்து டெல்லிக்கு அதிகமானோர் செல்ல வேண்டும் . தமிழகத்திற்கு அறிவிக்கப்படும் ரயில்கள் கேரளா வரை நீட்டிக்க காரணம் மத்திய அரசுப் பணியில் அவர்கள் அதிகம் இருப்பதுதான் .

அதிமுகவை அழித்துதான் பாஜக வளர வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. பல முக்கிய மசோதா நிறைவேற அதிமுக எங்களுக்கு துணையாக இருந்தது.

20 சதவீத மக்கள் தேசிய அரசியலுக்கு ஆதரவாக உள்ளனர். அதிமுக குறித்து எங்களது கட்சியினர் தலைமையின் உத்தரவு இல்லாமல் எந்த கருத்தையும் பேசக்கூடாது என கூறியுள்ளோம். அதிமுகவுடன் எங்களுக்கு சண்டை சச்சரவு கிடையாது. எங்களது கட்சி குறித்து அதிமுகவினர் சிலர் தவறான கருத்தை கூறினாலும் ஓபிஎஸ் , இபிஎஸ் அதை ஏற்க மாட்டார்கள்.

சீமானுக்கு அவரது கட்சியை முதலிடம் கொண்டுவர ஆசை இருப்பதுபோல, பாஜகவை முதலிடம் கொண்டுவர எனக்கும் ஆசை இருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் சீமான் எங்களது பக்கம் சாய்ந்து தனது கோரிக்கையை நிறைவேற்ற முயற்சித்தால் கூட சரியான முடிவாகவே இருக்கும். இலங்கை மக்களுக்கு நல்லது செய்ய மோடியால் மட்டும்தான் முடியும் என்பது சீமானுக்கும் தெரியும்.

குறு சிறு நிறுவனங்கள் அதிகமிருப்பது தமிழகத்தில்தான். எனவே லூலூ மால் இங்கு தேவை கிடையாது. பிகார் , உத்தரபிரதேசத்துக்கு வேண்டுமானால் அந்த நிறுவனம் தேவைப்படலாம். லூ லூ வந்தால் அண்ணாச்சி கடைகள் கூட காணாமல் போய்விடும் . ரிலையன்ஸ் இதுபோன்ற தவறை செய்தால் நாங்கள் அப்போது அதை கண்டிப்போம் ” இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *