தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட சீட் கிடைக்காத விரக்தியில் தி.மு.க நிர்வாகிகள் கலைஞர் சிலையிடம் மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் களம் பரபரப்பாக உள்ள நிலையில், வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது வரை அரசியல் கட்சியினரிடையே தொகுதிப்பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்துக் கட்சிகளும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், திமுகவிலும் பாஜகவிலும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவில் சீட் கேட்டு கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் கவுன்சிலர்கள் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் திமுகவினருக்கு அமைச்சர்கள் பனிவேல்தியாகராஜன், மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் பொன்.முத்துராமலிங்கம், தளபதி ஆகியோர் வேட்பாளர்களை தேர்வு செய்து இடங்களை ஒதுக்கி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஒரு சீட் கூட ஒதுக்காத காரணத்தால் கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி, விசிக வெளியேறினார். இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் போட்டியிட சீட் கிடைக்காத திமுக நிரர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மதுரை மாநகராட்சி 32 வது வார்டை சேர்ந்த கலையரசி, 27 வது வார்டை சேர்ந்த ராஜேந்திரன், 28வது வார்டை சேர்ந்த சரசு, 24 வது வார்டை சேர்ந்த முத்துமணி ஆகியோர் திமுகவில் 25 ஆண்டுகாலமாக கட்சிக்கு உழைத்தும் சீட் கேட்டும் தங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை எனவும், திமுக வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் தனது மருமகள் மற்றும் உறவினர்களுக்கு வார்டை ஒதுக்கி புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்து சிம்மக்கல் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலைக்கு மனு கொடுத்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். திமுக மாவட்ட செயலாளர்கள் கட்சி அழிவுப்பாதைக்கு செல்வதாகவும், 25 ஆண்டு காலமாக கட்சிக்கு உழைத்தவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
சீட் கிடைக்காத திமுக நிர்வாகிகள் கலைஞர் சிலையிடம் மனு கொடுத்து முறையீடு..!
