• Fri. Apr 26th, 2024

வீரபாண்டியில் ‘பப்ளிக் டாய்லட்’ இப்புடித்தாங்க!…

தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில், ஆயிரக்காண மக்கள் வசிக்கின்றனர். அடிப்படை வசதிகளான ரோடு, குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதிகள் சொல்லும்படியாக நிறைவேற்றவில்லை என்பது வார்டு மக்களின் அன்றாட குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.

இது புறம் இருக்க, தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துவதற்காக, இங்குள்ள பிரசித்து பெற்ற கௌமாரியம்மன் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

இதனால் வீரபாண்டியில் எப்போதும் பக்தர்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். வார்டு மக்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் முகம் சுளிக்கும் வகையில் இங்குள்ள பெரும்பாலான ‘பப்ளிக் டாய்லட்’ கள் காட்சியளிக்கின்றன.

இதில் ஒரு சில பயன்பாட்டில் இருந்தாலும், தண்ணீர் வசதி இன்றி ‘கப்’ அடித்து வருகிறது. இதனால் ‘அவசர’ நேரங்களில் உள்ளே செல்வோர் மூக்கை பொத்திக் கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது.

இதுபோன்ற கொடுமை எல்லாம் வீரபாண்டிக்கு வந்து, செல்லும் பக்தர்கள் அனுபவித்து செல்வதை காணமுடிகிறது. குறிப்பாக, வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டு செட்டியார் தெருவில், கடந்த 2007-08ம் ஆண்டு பல லட்ச ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட நவீன சுகாதார வளாகம் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது.

இங்குள்ள பொருட்கள் வைப்பு அறையும் எப்போது பார்த்தாலும் பூட்டியே காணப்படுகிறது. இதனருகே பெண்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட ‘டாய்லட்’ டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக வார்டு மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எது எப்படியோ, எந்த நோக்கத்திற்காக இதுபோன்ற நவீன ‘டாய்லட்’ கள் கட்டி முடிக்கப்பட்டதோ, அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பேரூராட்சி நிர்வாகம் இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாசுமலை

முன்னதாக, இந்த அவலநிலை குறித்து உண்மை நிலையை அறிந்து கொள்ள நமது ‘அரசியல் டுடே’ செய்தியாளர், பேரூராட்சி அலுவலகத்திற்கு அலைபேசியில் தொடர்பு கொண்டார். அதற்கு, அலைபேசியை எடுத்தவுடன் சொல்லுங்க.., வாசுமலை கிளார்க் பேசுறேன், ‘பப்ளிக் டாய்லட்’ இப்புடித்தாங்க….. இருக்கும் இதைப் போய் பெருசா பேசிகிட்டு,என கூறி, சட்டென்று…துண்டிப்பு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *