• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே 1200 ஆண்டுகள் பழமையான கிரந்தம் கல்வெட்டு கண்டுபிடிப்பு

ByA.Tamilselvan

May 4, 2022

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் உச்சப்பட்டியில் 1200 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கிரந்தம் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது
மதுரை அருகேயுள்ள கீழடியில் பல கட்ட தொல்லியியல் ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன.கீழடியில் மட்டுமல்ல மதுரை சுற்றியுள்ள பல இடங்களிலும் பழமையான கல்வெட்டுகளும், சிற்பங்களும் கிடைத்துவருவது குறிப்பிடத்தக்கது
திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டியை சேர்ந்த சூரிய பிரகாஷ் கொடுத்த தகவலின்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் இலட்சுமண மூர்த்தி , ஆகியோர் கொண்ட குழுவினர் மேற்பரப்பு கள ஆய்வு செய்த போது சூலாயுதம் பொறிக்கப்பட்டு கிரந்த எழுத்துகளுடன் கல்வெட்டு கண்டறியப்பட்டது . இக்கல்வெட்டை மை படி எடுத்து ஆய்வு செய்த போது பொ.ஆ 9 ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று அறியலாம் .
இது குறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் து முனீஸ்வரன் கூறியதாவது
பாண்டியர் ஆட்சி காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் தினசரி வழிபாடு செய்வதற்கு, நந்த தீபம் ஏற்றுவதற்கு, சமய சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கு, கோவில் பராமரிப்பு களுக்கும், மன்னர் பல ஏக்கர் நஞ்சை புஞ்சை நிலங்கள் மீது வரியை நீக்கி கோவில்களுக்கு (இறையிலி) தானமாக கொடுக்கப்பட்டது.இந்த நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாய் கோவில் பராமரிக்கப்பட்டது .இவற்றை தேவதானம் என்று அழைக்கப்படுவார். தேவதானம் வழங்கப்படும் நிலங்களை அடையாளப்படுத்தும் வகையில் நான்கு மூலைகளில் எல்லைக்கல் நட்டு வைப்பது வழக்கம்.குறிப்பாக சிவன் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலதானம் ( திரிசூல குறியீடு) திருநாமத்துக்காணி என்றும், பெருமாள் கோவிலுக்கு வழங்கும் நில தானம் ( சங்கு, சக்கரம் குறியீடு) திருவிடையாட்டம் என்றும், சமண கோவிலுக்கு வழங்கும் நில தானம் ( முக்குடை குறியீடு) பள்ளி சந்தம் என அழைக்கப்படும்.
தற்போது கிடைத்துள்ள கல்வெட்டு செய்தி
உச்சப்பட்டியில் மருத காளியம்மன் கோவில் அருகே கண்டறியப்பட்ட தனித்தூண் கல்லில் 5 அடி நீளம் 1 ½ அடி அகலம் 3 வரி கிரந்தம் எழுத்துகளுடன் பொறிக்கப்பட்டு இருந்தன.

கல்தூணின் கீழ் பகுதியில் சிவன் கோவிலுக்கு நில தானம் வழங்கியதற்காக திரிசூலம் கோட்டுருவம் செதுக்கப்பட்டுள்ளது.இக்கல்வெட்டின் எழுத்துக்கள் அதிக தேய்மானம்
ஏற்பட்டதால் ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்களின் உதவியுடன் படிக்கப்பட்டது. இக்கல்வெட்டில் அவனி , ஸ்ரீமாறன் , மடை , தம்மம், அவந்தி, வேந்தன் என தொடச்சியற்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் ஆட்சி காலம் ( பொ.ஆ 835 முதல் 862) பொறிக்கப்பட்டு இருக்கலாம் என்றும், கல்வெட்டின் எழுத்தமைதி பொறுத்து அதன் காலம் பொ.ஆ 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.சமீபத்தில் இப்பகுதியில் பொ.ஆ.15ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் சிற்பம், விஜயநகர சின்னம் வராகன் கோட்டுருவம் கண்டறியப்பட்டது மற்றொரு சிறப்பு என்றார் .