தனக்கு ‘ஆதி’ என்று பெயர் வைத்ததே ‘மிருகம்’ படத்தின் இயக்குநரான சாமிதான்” என்ற உண்மையை வெளியில் சொல்லியிருக்கிறார் நடிகர் ஆதி.
நேற்று சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற ‘அக்கா குருவி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது ஆதி இதைத் தெரிவித்தார்.
இந்த விழாவில் நடிகர் ஆதி பேசியபோது, “இயக்குநர் சாமி சார்தான் என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர். அவர் இயக்கிய ‘மிருகம்’தான் என்னுடைய முதல் படம். எனக்கு “ஆதி” என பெயர் வைத்ததுகூட இவர்தான். இவர் என் அண்ணன் மாதிரி.
‘மிருகம்’ படத்தின் படப்பிடிப்பின்போது இவரை பார்க்கவே சிறிது பயமாக இருக்கும். அவர் பேசும் தோரணையே கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும். ஆனால், அவருடன் பழக, பழகத்தான் எனக்கு அவரை பற்றி புரிந்தது.
அவருக்கு சினிமாவை தவிர வேறு ஏதும் தெரியாது. சில பேர் உள்ளே அழுக்கை வைத்துக் கொண்டு வெளியில் அழகாக பேசுவார்கள். ஆனால், இயக்குநர் சாமி வெளியில் கொஞ்சம் முரட்டுத்தனமாக தோற்றமளித்தாலும் அவரின் உள்ளம் அழகானது.
இந்த படத்தின் காட்சிகள் மிகவும் அழகாக இருந்தது. வழக்கமாக நாம் பார்க்கும் படங்கள் ஹீரோவை சுற்றி மட்டுமே இருக்கும். அது போன்ற படங்கள் நமக்கு பழகிவிட்டன. அதற்கு நடுவில் ஒரு கிராமத்தில் இருக்கும் வீட்டில் உள்ள இரு குழந்தைகளை பற்றிய கதையை சொல்லும்போது எனக்கு அது மிக சுவாரஸ்யமாக இருந்தது. படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இளையராஜா அவர்களின் இசை இது போன்ற படங்களுக்கு எப்படி இருக்கும் என்று டிரெயிலரைப் பார்க்கும்போதே தெரிகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்றார்.