• Fri. Mar 29th, 2024

சிலிண்டரை வெடிக்க வைப்பதற்கு ஆக்சிஜனை பயன்படுத்தினாராமுபின்?

ByA.Tamilselvan

Oct 29, 2022

கேவை கார் வெடிப்பு சம்பவத்தில் சிலிண்டரை வெடிக்க வைக்க ஆக்சிஜனை பயன்படுத்தினாரா முபின் என தடயவியல் ஆய்வில் விடை கிடைக்கும்.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று மீண்டும் கோவை சென்று விசாரணை நடத்தினார்.
கார் வெடித்து சிதறிய போது அதில் பயணம் செய்த முபினும் கருகி உயிரிழந்து விட்டார். காரில் எடுத்துச் செல்லப்பட்ட சிலிண்டர் வெடித்ததாகவே முதலில் கூறப்பட்டது. ஆனால் சம்பவ இடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வெடி பொருட்களும் சிக்கின. இதனால் வெடி மருந்துடன் சேர்ந்து சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்பட்டது. சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆணிகள், கோலி குண்டுகள் ஆகியவை காரில் வெடி பொருட்கள் இருந்ததற்கான அடையாளத்தை உறுதிப்படுத்தின. அதேபோல கோவை உக்கடத்தில் உள்ள முபின் வீட்டில் சோதனை செய்ததில் 109 வகையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொட்டாசியம் நைட்ரேட், தீப்பெட்டி, 2 மீட்டர் நீளமான வெடிபொருட்கள், நைட்ரோ கிளிசரின், சிவப்பு பாஸ்பரஸ், அலுமினியம் பொடி, ஆக்ஸிஜன் சிலிண்டர் சல்பர்பொடி, அறுவை சிகிச்சை கத்தி, பேட்டரி, சுவிட் உள்ளிட்ட பல பொருட்கள் கிடைத்துள்ளன..
இருப்பினும் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்தது எப்படி? என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்த நிலையில் காரில் வெடி மருந்து மற்றும் 2 சிலிண்டர்களுடன் பயணம் செய்த முபின் புதிய முறையில் தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. 2 சிலிண்டர்கள், வெடி பொருட்கள் ஆகியவற்றுடன் ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றையும் முபின் எடுத்துச் சென்றுள்ளார். எல்.பி.ஜி. சிலிண்டரில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டால் தீப்பொறி உருவாகி வெடித்து சிதறி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள் தடயவியல் நிபுணர்கள்.
இந்த மாதிரியான முயற்சியில் ஈடுபட்டு முபின் சிலிண்டரை வெடிக்கச் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் கூறும்போது, எல்.பி.ஜி. சிலிண்டருடன் வெடிக்காத ஒரு சிலிண்டர் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதை சென்னை தடயவியல் துறை நிபுணர்கள் நன்கு அலசி ஆய்வு செய்து வருகிறார்கள். . போலீஸ் வாகன சோதனையின்போது மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் முபின் சிலிண்டரை திட்டமிட்டே வெடிக்க செய்திருக்கலாமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதற்கும் விடை காணும் முயற்சியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களும் தங்களது ஆய்வை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *