கொரோனா தடுப்பூசி தொடர்பாக மதத்தின் பெயரால் வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “நாட்டில் ஒரே ஆண்டில் 157 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருக்கிறோம். கொரோனா தடுப்பூசியில் இந்தியா, உலகுக்கே வழிகாட்டியாகத் திகழ்கிறது. இதற்கு, பிரதமர் மோடியே காரணம். நோய் பரவல் அதிகரித்திருந்தாலும்கூட தடுப்பூசி செலுத்தியதால்தான் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், தடுப்பூசி கிடைக்கவில்லை என்பது போல பிரசாரம் செய்தது.
இதுவரை தமிழகத்தில் 8.98 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கு தி.மு.க-வினர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன் சி.லாசரஸ் என்பவர், கிறிஸ்தவ மக்களிடம் தடுப்பூசி செலுத்திகொள்ளக்கூடாது என்றும், செலுத்தினால் பல பிரச்னைகள் உருவாகும் என்றும் தவறாக வதந்தி பரப்புகிறார். தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைக்கு மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
மதத்தின் பெயரால் வதந்தி பரப்புவது உயிரை பலி கொடுப்பதற்குச் சமம். எனவே, வதந்தி பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். தன்னுடைய இதே கருத்தை அவர் தன் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார். நாராயணன் திருப்பதியின் இந்த குற்றச்சாட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் உள்ள இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமாரிடம் பேசினோம். “மதுரை மாவட்டம் கல்மேடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் ஜோதிகாவுக்கு காய்ச்சல், சளி இருந்ததால் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வந்து குடும்பத்துடன் அவதிப்படுவதை விட விஷம் குடித்து குடும்பத்துடன் இறந்து விடலாம் என்று தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில், இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்த செய்தி கடந்த ஜனவரி 10-ம் தேதி நாளேடுகளில் வெளியானது. அதைத் தொடர்ந்து அடுத்த சில நாள்களில் வீடியோவில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் மோகன் சி.லாசரஸ், “கொரோனா வந்துவிடுமோ என பயந்து மதுரையில் ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயன்றுள்ளது. அனைவரும் முதலில் அச்ச உணர்வை தூக்கி எறிய வேண்டும். ஆண்டவரிடம் ஜெபம் செய்யுங்கள்.
அச்ச உணர்வே எல்லாவற்றுக்கும் காரணம்” என்றுதான் பேசினார். எங்களது ஊழிய அலுவலகத்தில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அனைவருமே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறோம். கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ஒன்றரை கோடி ரூபாய் வரை தமிழக அரசிடம் அளித்துள்ளோம்.
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.30 லட்சம் நிதியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அளித்துள்ளோம். தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். கொரோனாவை நினைத்து அச்சபட வேண்டாம் என்றுதான் சார் பேசியிருக்கிறார். அவர் பேசிய வீடியோ சில வார்த்தைகள் எடிட்செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவர் கருத்து தவறாக திரிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க செய்யும் அரசியலுக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை” என்றார்.