தமிழ்நாடு அரசு கோவில்கள் பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடியிருக்கும் பல்வேறு இடங்களில் செயல்படும் அரசு மதுபான கடையை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஆனாலும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு மதுபான கடைகள் இருந்து வருகிறது இதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து வரும் நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் புள்ளான்விடுதி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வழிபாட்டுத்தலம் பொதுமக்கள் வசிக்கும் வீடுகள் என அதிக அளவில் மக்கள் வசிக்கும் இடங்களில் பலருக்கும் இடையூறாக அரசு மதுபான கடை இருந்து வருகிறது இதனால் பொதுமக்கள் காலை மாலை நேரத்தில் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அது மட்டுமில்லாமல் பள்ளி மாணவர்கள் பேருந்துக்காக நிற்கும் பொதுமக்கள் என பலரும் இந்த அரசு மதுபான கடையால் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

மதுவை குடித்துவிட்டு சாலையிலேயே குடிமகன்கள் படுத்துக்கொண்டு விடுகிறார்கள் மேலும் இந்த அரசு மதுபான கடையால் அங்கே படிக்கும் இளைஞர்களும் மதுவுக்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே உடனடியாக அரசு தலையிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த அரசு மதுபான கடையை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அரசு மதுபான கடையை அகற்றும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.




