• Tue. Dec 10th, 2024

ஹெலிகாப்டர் விபத்தின் போது தீயை அணைக்க உதவிய ஊர்மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு

Byகாயத்ரி

Dec 10, 2021

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தின் போது தீயை அணைக்க உதவிய ஊர்மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார். நீலகிரியில் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய பிறகு டிஜிபி பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், முப்படைகளின் தலைமை தளபதி பயணம் செய்த MI-17V5 ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து நெஞ்சப்பன் சத்திரம் கிராம மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவல் தமிழக முதல்வர் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை, தீயணைப்புத்துறை, தடயவியல் துறையில் உள்ள மூத்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகள் உடனடியாக நடைபெற வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் 12.25 மணிக்கு குன்னூர் காவல் நிலைய அதிகாரிகள் டிஎஸ்பி, ஏடிஎஸ்பி உள்ளிட்டோர் இந்த ஊருக்கே வந்து நெஞ்சப்பன் சத்திரம் மக்களுடன் சேர்ந்து 3 பேரை அவர்கள் உயிருடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தனர்.

அதிகமாக தீ பிடித்து எரிந்து கொண்டிருந்த சிரமமாக சூழ்நிலையிலும் இந்த ஊர் மக்கள் அவர்களின் வீட்டில் உள்ள போர்வை உள்ளிட்ட பொருட்களை கொடுத்து மீட்பு பணி நடைபெற்றுள்ளது. மீட்கப்பட்ட 3 பேரும் அப்போது பேசியுள்ளனர். அவர்களை சாலைக்கு தூக்கி கொண்டுவந்து ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நெஞ்சப்பன் சத்திரம் ஊர்மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் இணைந்து குரூப் கேப்டன் வருண் உள்ளிட்டோரை மீட்டுள்ளனர். இந்த அளவுக்கு உதவி செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சப்-கலெக்டர், டிஎஸ்பி, எஸ்.பி உள்ளிட்டோர் நன்றி தெரிவிக்க வந்துள்ளனர்.

இதுகுறித்து குன்னூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 26 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த வழக்கு கூடுதல் எஸ்.பி அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை தகவல்கள் ஒன்றிய பாதுகாப்பு படையினருடன் தெரிவிக்கப்படும்.

முப்படை தலைமை தளபதி இங்கு வரும் போதெல்லாம் வான் மார்க்கம் வரும் போதும் கூட தரைவழி போக்குவரத்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்படும். மொத்த நீலகிரி மாவட்டமும் இந்த பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துவிடும். தேவையற்ற நபர்கள் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் வேறு சந்தேகங்கள் இல்லை என்று டிஜிபி சைலேந்திர பாபு பேட்டியில் தெரிவித்துள்ளார்.