தேனி மாவட்டம், பழனிச்செட்டிபட்டி, குச்சனூர், பூதிப்புரம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளில், ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, அடிப்படை வசதி திட்டம் 2020 – கீழ் பி.சி.பட்டி பேரூராட்சி ராசிநகரில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் தார்ச்சலை அமைத்தல் பணி, குச்சனூர் பேரூராட்சி பகுதியில் ரூ 36 இலட்சம் மதிப்பீட்டில், சனீஸ்வரன் கோவில் சுரபி நதியில் பயணிகள் பாதுகாப்பு கிரில் அமைத்தல் பணி, ரூ. 36 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் தங்கும் விடுதியில் சுற்றுச்சுவர் மற்றும் சமையலறை கட்டும் பணி, ரூ 20 இலட்சம் மதிப்பீட்டில் கிறிஸ்டியன் மயானத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி, பழனிச்செட்டிபட்டி பகுதியில் வீட்டு இணைப்பு பாதாள சாக்கடைத் திட்டம் 2020-21 ன் கீழ் ரூ 243 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணி மற்றும் பூதிப்புரம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ 200 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பூதிப்புரம் அல்லிநகரம் இணைப்பு சாலை அமைத்தல் பணி, முதலீடு திட்டத்தின் (GGF) 2020-21 – ன் கீழ் ரூ 34.50 இலட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைத்தல் பணி என மொத்தம் ரூ 604.50 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றும் வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் , பூதிப்புரம் அரசு ஆரம்பப் பள்ளி, பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் குச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி, சமயலறைக்கூடம், மேற்கூரை சீரமைத்தல் மற்றும் புதிதாக நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடம், பள்ளிகளின் சுற்றுச்சூழல் சீரமைப்பு ஆகியன குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விபரங்கள் குறித்து கேட்டறிந்து, பள்ளிகள் முழுவதும் கிருமிநாசினிகள் கொண்டு சரிவர சுகாதார பணிகள் மேற்கொள்ள அறிவுறித்தினார்.

முன்னதாக, பூதிப்புரம் மற்றும் குச்சனூர் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு , இவ்வலுவலகத்தின் வாயிலாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும், பிறப்பு – இறப்பு சான்றிதழ் மற்றும் முதியோர் உதவித்தொகை ஆகியவை தொடர்பான மனுக்கள் குறித்தும், அதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, உதவி பொறியாளர் இராஜாராம் , இளநிலை பொறியாளர் குருசாமி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் சதாசிவம், சிவக்குமார், சசிகலா உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர் .
