• Thu. Apr 25th, 2024

ஆர்ப்பாட்டமா? மறியலா? என்னவென்றே தெரியாமலே போராடிய காங்கிரஸ் கட்சியினர்!..

Byகுமார்

Oct 5, 2021

அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் லக்கிம்பூர் பகுதியில், மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகன் அஜய் மிஸ்ராவின் கார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் மீது மோதியது. இதில் விவசாயிகள் நான்கு பேர் மரணமடைந்தனர். மேலும் இப்பிரச்சனையில் நடைபெற்ற கலவரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று அதிகாலை லக்னோவிலிருந்து சாலை மார்க்கமாக பன்வீர்பூர் கிராமத்திற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கிராம எல்லையிலேயே அவரை காவல்துறையினர் தடுத்து, கைது செய்தனர். இதனை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை தபால் நிலையம் முன்பாக மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஆர்ப்பாட்டமா, மறியலா என்பதில் கட்சியில் வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கும் மாநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முதலில் ஆர்ப்பாட்டம் செய்வோம் பின்னர், மறியல் செய்யலாம் என பேசி முடிவு எடுக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மறியல் செய்யாமல் கலைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் கலைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *