

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டு, பணியை காலதாமதப்படுத்தியதால் சாலையில் முட்கள் மூலம் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு அண்ணா நகர் தெருவில் சுமார் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த தெருவில் இருந்த தார் சாலையை அகற்றிவிட்டு சிமெண்ட் சாலை அமைக்க கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாலை தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜல்லி கற்கள் மட்டுமே பரப்பி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதால் குண்டும் குழியுமாக மாறி அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்த சூழலில் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் முட்கள் மூலம் தடுப்புகள் அமைத்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகராட்சி அலுவலர்கள் மற்றும் காவல்த்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சாலை அமைக்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது., இந்த சாலை மறியலால் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

