

கழுகுமலையில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு சுற்றுலா மலையில் உள்ள இரும்பு பாதுகாப்பு கம்பிகள் சேதம்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் சிரமத்துடன் சென்று வந்தனர். பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி கிடந்தனர். வெயிலின் தாக்கத்தால் இளநீர் வியாபாரம் மற்றும் குளிர் பான கடைகளில் வியாபாரம் ஜோராக நடந்தது.
இந்நிலையில் நேற்று ( 16 ம் தேதி) காலை முதல் மாலை 4 மணி வரை வெயில் அடித்தது. பின்னர் 4.15 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு சூறாவளி காற்றுடன் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதில் கோவில்பட்டி சாலையில் உள்ள புளிய மரங்களில் உள்ள கிளைகள் பல இடங்களில் முறிந்து விழுந்தது. கழுகுமலை – சிவகாசி செல்லும் சாலையில் லட்சுமிபுரம் ஊருக்கு அருகே உள்ள தரை பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் கழுகுமலை சுற்றுலா மலை மீது உள்ள சமணர் சிற்பங்களை சுற்றி பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ள இரும்பு கேட் கள் மற்றும் கை பிடிகள், கம்பி வேலிகள் சூறாவளி காற்றால் கீழே சாய்ந்து பலத்த சேதமடைந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தொல்லியல் துறை காவலர்கள் கங்கா துரை மற்றும் அருண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மழை நின்ற பின்பு அவர்கள் மலையை விட்டு கீழே இறங்கினர். சுற்றுலா மலை மீது சாய்ந்து கிடக்கும் இரும்பு கம்பி வேலிகள் மற்றும் பாதுகாப்பு கதவுகளை உடனே சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொல்லியல் துறை பாதுகாப்பு காவலர்களுக்கு மழை காலங்களில் தங்குவதற்கு மலை மீது தனி அறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
