• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கடலூர் புவனகிரியில் விறுவிறுப்பாகத் தொடங்கிய மறுவாக்குப்பதிவு..!

Byவிஷா

Feb 24, 2022

தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சிகளில் காலியாக உள்ள நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பெரும்பாலான இடங்களில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில், கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளுக்கு 19ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கான பதவிகளுக்கு 78 பேர் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு அன்று இரவு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும், வாக்கு எண்ணிக்கை மையமான புவனகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. செவ்வாய்கிழமை புவனகிரி பேரூராட்சியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது 4-ஆவது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் நான்கில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுதானது. இதனால் அந்த வார்டில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4வது வார்டு திருவள்ளுவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி எண் 4ல் மட்டும் பிப்.24ல் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அசம்பாவித சம்பவம் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் ஏடிஎஸ்பி அசோக்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.