• Sat. Apr 20th, 2024

மூன்று மாவடியில் கள்ளழகர் எதிர்சேவை..!

Byகுமார்

Apr 15, 2022

மூன்று மாவடியில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர் சேவை நிகழ்ச்சியில் பக்தர்கள் அழகரை வணங்கி வரவேற்றனர்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்கவும், ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்றுக்கொள்ளவும், வைகை ஆற்றில் இறங்கவும் மதுரைக்கு சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருள நேற்று இரவு 7 மணியளவில் அழகர்கோவிலில் இருந்து கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் சங்கு, சக்கரம், நேரிக்கம்பு, வளைதடியுடன் கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். முன்னதாக பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில்முன்பு கள்ளழகருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தப்பட்டு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் தங்கப்பல்லக்கில் நேற்று இரவு மதுரையை நோக்கி புறப்பட்டார்.


வழிநெடுகிலும் உள்ள பொய்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக வைகை கரை வரை உள்ள 462 மண்டபங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் மூன்று மாவடியில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர் சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் அழகரை வரவேற்றனர். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நாளை காலை 05.50 மணி முதல் 06.20 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளுகிறார்.
விழாவையொட்டி வைகை அணையில் இருந்து வைகை ஆற்றுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாளை காலை நடைபெறும் விழாவில் பல லட்சம் பக்தர்கள் கூடுவர் என்பதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மாநகர காவல் துறையும் செய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *