

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விஜயா (66) என்ற பெண் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் மே 22ஆம் தேதி உயிரிழந்தார்.
ஆனால் அவர் அக்டோபர் 28ஆம் தேதி 2ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் இருந்துள்ளது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமரன் (25) என்ற நபர் சென்னையில் இருக்கும் போது சொந்த ஊரில் தடுப்பூசி போட்டதாக குறுஞ் செய்தி அனுப்பப்பட்டது.
அதே போல் சென்னையில் பணிபுரியும் தஞ்சாவூரை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கும், தருமபுரியை சேர்ந்த 30 வயது நபருக்கும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாமலே செலுத்தியதாக சான்றிதழ் கிடைத்தது.
இதுபோல் சான்றிதழ் கொடுப்பதில் குளறுபடி தொடர்வதால் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவை ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.தமிழகத்தில் இதுவரை 65 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உரிய நேரத்தில் இரண்டாவது தவணை செலுத்தாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
