இந்தியாவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா 3ம் அலை உச்சத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 1 வார காலமாக இந்தியா முழுவதும் குறிப்பாக டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் அடுத்த 2 வாரங்களில் இந்தியாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.கொரோனா 2ம் அலையின் போது, இருந்த மருத்துவ சிகிச்சை பற்றாக்குறை இந்த முறை இருக்காது என்று சௌமியா தெரிவித்தார்.
இந்திய மருத்துவமனைகள் தற்போது தயாராகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டெல்டாவை பின்னுக்கு தள்ளி ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது என்று நோய் எதிர்ப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு கூறியுள்ளது. ஜனவரி கடைசி வாரத்திலும் பிப்ரவரி முதல் வாரத்திலும் கொரோனா 3வது உச்சத்தில் இருக்கும் என்றும் இந்த குழு கணித்துள்ளது.