• Wed. Apr 24th, 2024

மேற்கு வங்கத்தில் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை..!

Byவிஷா

May 8, 2023

மேற்கு வங்காள மாநிலத்தில் அரசு ஊழியர்களை மிரட்டும் நோக்கத்தில் அமைச்சர் ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்கக் கோரியும், ஒப்பந்த பணியிடங்களை நிரந்தரமாக்கக் கோரியும் மாநில அரசு ஊழியர்களின் கூட்டு மன்றம் நேற்று முன்தினம் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அம்மாநில அமைச்சருமான உஜ்ஜல் பிஸ்வாஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், மம்தா பானர்ஜியை தவறாக பேசினால் உங்கள் நாக்கை பிடுங்குவோம் என்று பணியாளர்களை மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஆன்லைனில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் உஜ்ஜல் பிஸ்வாஸ், அவர்கள் (பணியாளர்கள்) பள்ளிக்கு வருகிறார்கள், வேலை செய்யவில்லை ஆனால் இன்னும் சம்பளம் பெறுகிறார்கள். உங்கள் ஆர்ப்பாட்டத்தை பொதுமக்கள் முன் காட்ட விரும்புகிறீர்களா? கவலைப்பட வேண்டாம், நாங்கள் (மேற்கு வங்க அரசு) நீங்கள் எங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த முடியாது என்பதை உறுதிப்படுத்த தயாராக இருக்கிறோம். மம்தா பானர்ஜியை தவறாக பேசினால் உங்கள் நாக்கை பிடுங்குவோம். இனிமேல் அதுதான் வழக்கமாக இருக்கும் என்று பேசியுள்ளார்.
மேற்கு வங்க அமைச்சரின் மிரட்டலை குறிப்பிட்டு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அம்மாநில அரசை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், மம்தா பானர்ஜியின் கீழ் மேற்கு வங்கம் ஒரு மூன்றாம் தர சர்வாதிகாரத்தை ஒத்திருக்கிறது. அங்கு வன்முறை மற்றும் எதிர்ப்பு குரல்களை அழிப்பது இப்போது வழக்கமாக உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய மிகக் கொடூரமான வன்முறை, பல கற்பழிப்பு மற்றும் கொலைகள், அரசால் நடத்தப்பட்ட வகுப்புவாத கலவரங்கள் மற்றும் மோசமான சம்பவங்களை மாநிலம் கண்டுள்ளது என்று பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *