உசிலம்பட்டியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உசிலம்பட்டி கோட்டாச்சியர் தலைமையில் அரசு துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வடகிழக்கு பருவமழை எதிர் கொண்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் உசிலம்பட்டி வட்டாச்சியர் பாலகிருஷ்ணன், உசிலம்பட்டி மற்றும் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்களுக்கு பருவமழையை எதிர் கொண்டு மக்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது.
ஒவ்வொரு கிராமத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மக்கள் பருவமழை காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர எண்களை பதாதைகளாக வைக்க வேண்டும், கிராம பகுதிக்கு செல்லும் போது கிராம மக்களிடம் அவசர எண்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்து அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், நீர் நிலைகளில் ஏற்படும் மழை பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட பணிகளை அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் வழங்கினார்.