


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், புதிய அறந்தாங்கி (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகத்தினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் , அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமார், கண்காணிப்பு பொறியாளர் (திருச்சி) ஆர்.கே.ரமேஷ், கோட்டப் பொறியாளர்கள் அ.மாதேஸ்வரன் (அறந்தாங்கி), ஆர்.தமிழழகன் (புதுக்கோட்டை), அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், அறந்தாங்கி வட்டாட்சியர் க.கருப்பையா, உதவி கோட்டப் பொறியாளர்கள் ஆர்.சுந்தர்ராஜ், எம்,ரவிச்சந்திரன், ஆர்.இந்துமதி, பி.ரவிச்சந்திரன், தியாகராஜன், மாங்குடி அனைத்து உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்;

பின்னர் சட்டத்துறை அமைச்சர் பேசியது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு நலனில் மிகுந்த அக்கறைகொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் 68,150 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைகள் முழுவதும் கண்காணிப்பு பொறியாளர்கள் தலைமையிலான 9 வட்டங்கள், கோட்டப் பொறியாளர்கள் தலைமையில் 45 கோட்டங்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், பராமரிப்பு செய்யப்பட்டும் வந்தது. அந்த வகையில், நிர்வாக வசதியை முன்னிட்டும், நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் தமிழக அரசு மேலும் 1 வட்டம் மற்றும் 4 கோட்டங்களை உருவாக்கியுள்ளது.
மேலும், 2800 கி.மீ. நீளமுள்ள சாலைகளை பராமரித்து வந்த நம் புதுக்கோட்டை கோட்டத்தை பிரித்து பராமரிப்பு மற்றும் நிர்வாக வசதிக்காக அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு புதிதாக கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைப்பணிகளின் தரத்தினை உறுதி செய்யும் வகையில் அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு ஒரு தரக்கட்டுப்பாட்டு உட்கோட்டமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றையதினம் புதிய அறந்தாங்கி (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய பொது மக்களின் நான் காத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், சாலைகள் அமைத்தல், சாலைகள் பராமரித்தல், சாலைகள் சீர் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் அறந்தாங்கியில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், புதிய அறந்தாங்கி (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட அறந்தாங்கி கோட்டத்தின் கட்டுப்பாட்டில் திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் ஆகிய உட்கோட்டங்களில் 1463 கி.மீ. நீளமுள்ள சாலைகள் அடங்கி உள்ளன. மேலும், புதுக்கோட்டை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் புதுக்கோட்டை கிழக்கு, புதுக்கோட்டை மேற்கு, கீரனூர், விராலிமலை ஆகிய உட்கோட்டங்களில் உள்ள 1340.60 கி.மீ. சாலைகள் அடங்கி உள்ளன. இதில், புதுக்கோட்டை மேற்கு மற்றும் விராலிமலை உட்கோட்டங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டவை ஆகும். எனவே புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கிடைத்துள்ள புதிய கோட்டத்தின் மூலம் நெடுஞ்சாலைத்துறை பணிகளையும், பராமரிப்பு பணிகளையும் உயர் அலுவலர்களால் அருகிலிருந்து கண்காணிக்க முடியும் என தெரிவித்தார்.

